ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

::: 32 கேள்விகள் - தொடர் பதிவு


இருப்புக்குள் மீண்ட நண்பன் ரிஷான் ஷெரீபிற்கு புதுவாழ்க்கைக்கான வாழ்த்துகளையும், எனை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கான அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு தொடங்குகிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

இயற்பெயர் பிடிக்காதவர் உண்டு, புனைபெயர் பிடிக்காதவர் உண்டா? எனது இயற்பெயரின் அர்த்தத்தினை தூய தமிழ்சொல்லால் வடமொழிக் கலப்பின்றி எழுத நினைத்து, எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜூன் 3, 2009. அர்த்தமற்றுப் போன சம்பவங்களால் சில முறை அழுவதுண்டு, அழுததால் அர்த்தம்பெற்றுக் கொண்ட சில அழுகையுண்டு, இது இரண்டாம் வகை. என்னையும், என் தோழனையும், என் தோழியையும் பற்றி வெகுவாக அன்பு மட்டுமே கலந்த அர்த்தம் கொள்ள துணைவந்த துளிகளவை! வாழ்க!

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

வெகு சில நேரம் மட்டுமே. எனக்கான நிலையான கையெழுத்தென்பது இல்லை போலும். அவ்வப் பொழுது இருக்கும் மனநிலைக்கேற்ப கையெழுத்தும் மாறும். ஒரு நல்ல கையெழுத்தின் சொந்தக்காரரால் ஈர்க்கப் பட்டால் சில நாட்கள் அழகாகவே இருக்கும், மீத நாட்களில் கிறுக்கல்களே! என் கையெழுத்து என்பதால் பிடித்தம் கொஞ்சமுண்டு.

4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா சமைத்த மதிய உணவு வகைகள் அனைத்தும்!

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடனோ, கேட்டவுடனோ பலரைப் பிடித்து, சிலரைப் பிடிக்காமல் போனதுண்டு. பிடித்தவரை பிடிக்காதவராய் மாற்ற முடிந்தவரை விடமாட்டேன், பிடிக்காதவரை பிடித்தவராக்க எளிதில் அனுமதிப்பதுண்டு. பேச்சளவான நட்பிற்கு அதிகம் எல்லைகளை விதிக்காதவன். மனதளவு நட்பிற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறேன்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

ஏதோ ஒரு சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியர் சொன்னதினால் என் பெற்றோர் என்னை தண்ணீர் ஆழமுள்ள, அபாயமுள்ள எந்த இடத்திற்கும் அனுமதித்ததில்லை. இருப்பினும் வாலிபம் வந்த பிறகு அருவியிலும் கடலிலும் குளித்திருக்கிறேன் பாதுகாப்பான இடத்திலிருந்து. உண்மையில் இரண்டுமே எனக்குப் பிடித்தவையல்ல... மெல்ல ஓடும் கழுத்தளவுத் தண்ணீரில் குளிப்பதே சுகமெனக்கு

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

முகம், மற்றும் உடை. அதிக ஆடம்பரமும் பகட்டும் இல்லாது இருப்பின் நம்பிக்கையோடு பேசுவேன்.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

அவசியமான இடத்தில் உடனே மன்னிப்புக் கேட்பது, உதவுவது, நேர்மை எனக்கு என்னிடத்தில் பிடித்தவை. பிடிக்காதவையென இவற்றைச் சொல்லலாம் : என்னிடத்தில் பேச்சுத் தோழமையிலிருந்து மனசுத் தோழமைக்குக் குடிபெயர்தலின் பொழுது நான் அவர்களுக்கு விளைவிக்கும் பிரச்சினைகள், சில நேரம் என்னையறிந்தும், பல நேரம் என்னை அறியாமலும். என்னைப் புரிந்துகொண்டோர்கள், நம்பியவர்கள் இதன்பின்னும் நிலைத்திருப்பார்கள்! மற்றும், முக்கியமல்லாத அல்லது உணர்வு சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு அவ்வப்பொழுது இருக்கும் மனநிலையின் பதிலையே கூறுவது, முடிவான பதிலாக அல்லாமல்...

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விசயங்கள் என்ன?

என் பாதி என் தோழர்கள், அவர்களிடம் பிடிக்காததேயில்லை, அவர்கள் திருத்திக் கொண்டால் இன்னும் பிடித்தமாவார்களென்ற ஒரு சில விசயங்களைத் தவிர. குடும்பத்திற்கும்(ஒருவேளை திருமணம் புரிந்தால் மனைவிக்கும்) நான் பாதியைக் கொடுக்கவில்லை, என்னை முழுதுமே கொடுத்திருக்கிறேன்.

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

தோழர்கள், மற்றும் பெற்றோர். பெற்றோரைப் பிரிந்து 8 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தும் இன்னமும் அவர்களுக்குப் பிடித்தவனாய் நானிருப்பதற்குக் காரணம் என் தோழர்களே! நட்சத்திரம் பெரிதெனினும், நிலவின் வெளிச்சத்திலேயே 8 வருடங்கள் கழிப்பதால் நிலவு பெரிதெனப் படுகிறது. இவர்களைப் பிரிந்து தற்பொழுது தற்காலிகமாக ஜப்பானிலிருக்கும் நாட்கள் நரக நாட்களே!

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

கருநீல கைலி, வீட்டில் இருக்கும் போது மேல் சட்டை அநேகமாக அணிவதில்லை.

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

நிலாவே வா - மௌனராகம். எதற்காகவோ அந்தப் பாட்டிலுள்ள வலி என்னை ஆக்கிரமித்திருக்கிறது தற்பொழுதெல்லாம்...

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

வான் நீலம் மட்டும். நானாக விட்டு விலக எண்ணியும் என்னையே நாடி வந்து கொண்டிருப்பதால், விலக்கப்படாத அங்கீகாரம் அளித்திருக்கிறேன் அதற்கு.

14. பிடித்த மணம்?

மழைப் பொழுதின் மண்வாசனை, மழைநேரத்து தேநீர் வாசனை, சாணம் தெளித்த கிராமத்து பூர்வீக வீட்டு வாசனை.

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கோகுலன் - என் இணைய தோழன். பகிர்ந்துகொண்ட சொற்கள் சொச்சமே எனினும் அவனுக்கும் எனக்கும் ஒரு சின்ன புரிதல் இருக்கிறது. அவனது கவிதைகள் எனக்குப் பிடித்தம், சிறுகதை மிகப் பிடித்தம்.

சஹாராதென்றல் - என் இணைய தோழி. இதுவரை மின்மடல், மின்னரட்டையென எதிலும் பேசிராவிட்டாலும், அவளது புனைவுக் குறிப்புகளின் சுவைஞன் நான். குறிப்பெழுதுதல், கவிதை வரைதல் இரண்டிலும் கெட்டிக்காரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சமீபத்தில் வெளியான விருட்ச துரோகம். ஒவ்வொரு முறையும் இது மாறிக் கொண்டே இருக்கிறது புதிய படைப்புகள் வரும்பொழுது!!!

17. பிடித்த விளையாட்டு?

மைதானத்தில் பூப்பந்து, வீட்டிற்குள் விளையாட்டு விளையாடுவதில்லை, தோழர்களுடனான பேச்சு விளையாட்டு மட்டுமே.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், 7ம் வகுப்பிலிருந்து.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பணத்தைக் கொட்டி எடுக்கும் அர்த்தமுள்ள திரைப்படத்தின் அழகு (டைட்டானிக், டிராய், ...), ஆடம்பரமற்ற அருமையான கதை, திரைக்கதை (அன்பே சிவம், மௌனராகம், காதல் கொண்டேன்,...) அமைந்த கதை எதுவாயினும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

தமிழில் கடைசியாகப் பார்த்தது மறுபடியும் ஒருமுறை "அன்பே சிவம்". ஆங்கிலத்தில் கடைசியாகப் பார்த்தது மறுபடியும் ஒருமுறை "காஸ்ட் அவே" (cast away), என் தனிமைக்கு மருந்தாய் அந்த கதாநாயகனின் தனிமை!

21. பிடித்த பருவகாலம் எது?

மெல்லிய தூறல் பெய்யும் காலமெதுவாயினும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

மீண்டுமொரு முறை கவிக்கோ அப்துல் ரஹ்மானின் "பால்வீதி"

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

மாற்றாக எனைக் கவர்ந்த ஏதாவது கிடைக்கும் பொழுது, ஆயினும் அடிக்கடி மாற்றுவதில்லை.

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மௌனம், மற்றும் மௌனம் இதனின் மெல்லிய உணர்வுச் சத்தம், சந்தர்ப்பங்களைப் பொறுத்து.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

டோக்கியோ, இந்தியாவிலிருந்து 9 மணி நேர விமானப் பயணம்.

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

கவிதை, ஓவியம், இதில் சிறுகதை சேர்ந்து கொள்ளும் முயற்சியில்...

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்?

நீண்ட நேர விளக்கத்திற்குப் பிறகும் எனக்கு விருப்பமானவர்கள் என்னைப் புரிந்து கொள்ளாத விசயங்கள் மற்றும் நம்பிக்கைத் துரோகம்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

கொஞ்சம் முன்கோபம், கொஞ்சம் அவசரம்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

மொட்டை மாடி அதிகாலை, அந்தி, இரவு வேளைகளில்.

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

என்னைப் புரிந்து கொண்டவர்களை மட்டுமே கொண்ட சூழலில் சில சின்ன ஊடல்களோடும், பிறகு வரும் கூடல்களோடும் வாழ ஆசை.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

இப்பொழுது செய்யும் எல்லாமேதான், ஏனெனில் எனக்கு இப்பொழுதுவரை மனைவி, காதலி இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

ஒரேயொரு முறை வாழக் கிடைத்த வாய்ப்பில் பிறரிடம் அன்பு மட்டுமே செலுத்த வேண்டிய செல்லப் பயணம்!

14 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

//பேச்சளவான நட்பிற்கு அதிகம் எல்லைகளை விதிக்காதவன். மனதளவு நட்பிற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறேன்.//
:))

தல... பின்ற போ... ஆழ்ந்த... நிதானித்த பதில்கள்.. யோசிப்பீங்களோ?

எதார்த்தமான பதில்கள்

ரசித்தேன் ஒளியவன்!

//ஒரேயொரு முறை வாழக் கிடைத்த வாய்ப்பில் பிறரிடம் அன்பு மட்டுமே செலுத்த வேண்டிய செல்லப் பயணம்! //

அழகு !

உங்கள் அழைப்பிற்கு நன்றி ஒளியவன். கூடிய விரைவில் பதிலளிக்கிறேன்.
ஜப்பான் வாசம் இனிமையானதாக அமையும். வாழ்த்துக்கள்

நிலாண்ணா,
தம்பி முத்தலிப்,
ஷைலஜா அக்கா,
தோழன் ரிஷான்,
தோழி சஹாரா,
அனைவருக்கும் எனது நன்றி!

உங்களது பதிலுக்குக் காத்திருக்கிறேன் சஹாரா!

un mounam.. azhagu!

சரிங்க இரசிகை மேடம்!

அன்பின் ஒளியவன்

அருமையான இய்லபான ஒளிவு மறைவில்லாத பதில்கள்.

நல்வாழ்த்துகள்

அருமையான பதில்கள் நண்பா..

உன்னைப் பற்றி மேலும் அதிகம் அறிந்துகொள்ள இப்பதிவு பதில்கள் பெரிதும் உதவின.

//பிடித்தவரை பிடிக்காதவராய் மாற்ற முடிந்தவரை விடமாட்டேன், பிடிக்காதவரை பிடித்தவராக்க எளிதில் அனுமதிப்பதுண்டு. பேச்சளவான நட்பிற்கு அதிகம் எல்லைகளை விதிக்காதவன். மனதளவு நட்பிற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறேன்.

// அருமையான எண்ணம் நண்பா..

என்னை அழைத்தமைக்கும் நன்றி நண்பா..

நான் சகாராவை அழைக்கலாம் என்று இருந்தேன்.நீ அழைத்துவிட்டாய் :)

நன்றி சீனா ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

நன்றி நண்பா. சஹாராவும் அதைத்தான் சொன்னாள், உன்னை அழைக்க எண்ணியிருந்த்ததாக!

நான் உங்கள் இருவரின் எண்ண அலையோடு ஒத்துப் போயிருப்பது மகிழ்ச்சி! :-)

ஒளியவனிடம் இருந்து
ஒளிவெதுவும் இல்லாத
ஒளிமயமான (வார்த்தை) வீச்சுகள்
வசீகரிக்கின்றன

-எளியவனின் வாழ்த்துக்கள்
-என்றும் அன்புடன் துரை

நன்றி அன்பரே!

ஒளியவன் உங்களது வலைப்பதிவின் background கலர் அல்லது font கலர் எதயாச்சும் ஒன்னை மாத்திடுங்களேன், background டார்க்காக இருக்கும் போது எழுத்துரு லைட் கலரில் பயன்படுத்தலாமே.