என்னுடைய எண்ணங்கள் சில...
இந்தியாவின் புத்தகமான constitution of india ல் பகுதி 1 ன் முதல் வரியிலேயே "India, that is Bharat, shall be a Union of States." அப்படின்னு இருக்கு. பல பிரிவுகளான மாநிலங்களை ஒன்று கூட்டியதே ஒட்டு மொத்த இந்தியா. இதில் ஜம்மு, மற்றும் காஷ்மீருக்கு கொஞ்சமே வேறுபட்ட சட்டம் உண்டு.
இந்தி எந்த ஒரு இடத்திலும் அதிகாரப் பூர்வமான தேசிய மொழி என குறிப்பிடப் படவில்லை. இந்தியாவில் 2001 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்த விபரத்தின் பேரில் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், உருது, கன்னடம், ஒரியா போன்ற மொழிகள் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது தெரியவந்தது (இது இறங்குவரிசையில் அடுக்கப்பட்டுருக்கிறது).
பொதுவில் நான் இந்தி கட்டாயமாக்கப் படுதலையோ அல்லது இந்தி எதிர்ப்பையோ இரண்டையுமே ஆதரிக்கவில்லை. ஒருவருக்கு மற்றவரின் மொழி பல சமயங்களில் தெரிந்திருக்க வேண்டியுள்ளது. முக்கியமாக வியாபார நிமித்தம். ஆக அதைத் தெரிந்து கொள்வதும் தெரிந்து கொள்ளாததும் அவரவர் சுய விருப்பம். என்னுடைய சமுதாயத்துடன் பேசிப் பழக எனக்கென ஒரு மொழி இருக்கும் பட்சத்தில் நான் மற்ற சமுதாயத்துடன் பேசிப் பழக வேண்டிய அவசியமில்லாத தருணம் எனக்கு அவரது மொழி அவசியமில்லாததாகிறது. ஆக எனக்கு இந்தி அவசியமில்லை. அதே சமயத்தில் நான் வட இந்தியாவிற்கு குடிபோக நேரிட்டால் நிச்சயம் இந்தி கற்றுக் கொள்வேன். கொரியாவில் இருக்கும்பொழுது கொரிய மொழியின் முக்கிய சொற்களையும், இப்பொழுது ஜப்பானில் இருக்கும் பட்சத்தில் ஜப்பானிய மொழியையும் கற்றுக் கொள்ள முயல்கிறேன். ஆக இது முழுக்க முழுக்க தனிமனித விருப்பம் சார்ந்தது.
விருப்பப்பட்டவர் படிப்பதில் தவறே இல்லை. விருப்பப்படாதவரை படிக்கச் சொல்வது சிறிதும் ஞாயமில்லை. மிஞ்சிப் போனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் மொழியை கட்டாயப் பாடமாக படித்தல் வேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனையை கொண்டு வரட்டும். ஏனெனில் இந்தியாவின் எந்த மொழியும் அழிந்து போவதில் எனக்கு சம்மதமில்லை. பிற மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவர் அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வேறு மாநிலத்தில் இருந்தவரது குழந்தைகளுக்கு தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம், ஆனால் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவோ அல்லது ஒருவர் தமிழ்நாட்டிற்கு குடியேறி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலோ அவர்கள் தமிழைக் கட்டாயம் பயின்றே ஆக வேண்டுமென்பதில் தவறொன்றும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியையும் போற்றிக் காக்க வேண்டியது அவரவர் கடமை. இது போல தேசியத்திற்கு ஒத்துப்போகும் சட்ட திருத்தங்களை கொண்டு வரலாமேயன்றி ஒத்துவராத திணிப்பு தவறானதாகப் படுகிறது.
422 மில்லியன் இந்தியர்கள் இந்தி பேசுவதாலும், வெறும் 61 மில்லியன் இந்தியர்கள் தமிழ் பேசுவதாலும் இந்தியை தமிழ்நாட்டில் கட்டாய மொழியாகக் வேண்டுமென்பது அறிவின்மை. இந்தியாவில் 85 விழுக்காடு இந்துக்கள் இருப்பதால் இந்து மதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மதமாக்குவதற்கு ஒப்பாகும்!
இந்திய சமுதாயமென்பது ஒட்டுமொத்தமாக ஒரே பழக்கவழக்கத்தைக் கொண்ட சமுதாயமன்று. இங்கே மதங்களும், மொழிகளும் பல. சமுதாய வழக்கங்கள் மதங்களுக்கொன்றுமாகவும், மொழிக்கொன்றுமாகவும் இருக்கிறது. ஆக இந்தியர்கள் அனைவரும் இந்தி பேசினால்தான் இந்தியாவின் ஒற்றுமை போற்றப்படுமென்பது தவறு. அதே சமயம் இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப் படவேண்டிய சொத்து. அதை யாரும் சீரழிக்க முன்வருதல் கூடாது. சமஸ்கிருதம், ஆங்கிலம் இவற்றின் ஆதிக்கத்தில் எத்தனை அழகான தமிழ் சொற்கள் காணாமல் போயிருக்கின்றன, இத்தனைக்கும் இங்கே யாரும் அதை கட்டாயமாக்கவில்லை. இப்பொழுதே இப்படியென்றால் கட்டாயமாக்கப் பட்டால், தமிழ்மொழி பேசுபவரின் எண்ணிக்கை குறைவதில் ஆச்சரியமே இல்லை.
இப்பொழுதே ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் மற்றுபிற மொழிகள் இரண்டாம் மொழியாகவுமே இருக்கிறது. சகல விஞ்ஞானமும் அறிவியலும் கணக்கும் ஆங்கிலத்தில் இருப்பதால் அதை கட்டாய மொழியாக்கியது தவறாகப் படவில்லை. ஆயினும் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டாம் மொழியாகத்தான் வைத்திருத்தல் வேண்டும், ஏனெனில் இந்தியாவின் எந்த மாநிலமும் மொழி இல்லாத பிச்சைக்காரர்களாக இல்லை. அவரவர் மாநிலத்தில் அவரவர் மொழி தொன்மை வாய்ந்ததாகவும் அதனோடு பழக்கவழக்கங்களும் ஊறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி அழியும் அதே நேரத்தில் மக்களின் பழக்கங்களும் அழியும் என்பதில் ஐயமே இல்லை.
தமிழ்நாட்டில் இந்தி படிக்கவே தடையென்றால் அது தவறான செயல். ஏனெனில் உலகின் எந்த ஒரு மொழியையும் படிக்கும் உரிமை ஒரு மனிதனுக்கு வழங்கப்பட வேண்டும். அதே சமயம் அவனது தாய், தந்தை பிறந்த மாநிலத்தின் மொழியை ஒரு குழந்தை கற்பது அத்தியாவசியம். இல்லையேல் அந்த மொழியே அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் எங்குமே இந்தி படிக்கத் தடையிருப்பதாக தெரியவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டிலும் சரி வேறு எந்த மாநிலத்திலும் சரி அவரவர் மொழிகள் கட்டாயப் பாடமாக்கப்படாமல் இருப்பது எனக்கு வருத்தமே!