ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாதுபல புள்ளி விபரங்கள் காட்டும் எண்ணிக்கை இந்தியாவில் 81.3% இந்துக்களும், 12% முஸ்லீம்களும், மீதம் ஏனையோர்களும் இருப்பதாக கூறுகிறது. பல இணைய குழுமங்கள் முதல் அன்றாட பத்திரிகை வரை பலரால் விமர்சிக்கப்பட்ட மதம் இந்து மதமாகத்தான் இருக்கக் கூடும். காரணமும் இருக்கத்தான் செய்கிறது. இப்பேர்பட்ட விமர்சனங்களின் அச்சாணியாக இருப்பது சாதிய முறை என்ற ஒன்றே. சாதியின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டவர்கள் பலர் மதம் மாறினர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க, என்னுடைய பார்வையில் இந்து மதம் எனப்படுவது யாது அது எப்படி இருக்கிறது என்பதை பதிய விரும்புகிறேன்.

இந்து என்பது முதற்கண் ஒரு மதம் அல்ல, அது ஒரு நெறிமுறை, தத்துவம், கோட்பாடு. மற்ற பெரிய இரு மதங்களில் மதத்திற்கொரு புத்தகமென்று வைத்துக்கொண்டு அதை அந்த மதக்காரர்கள் தவறாமல் வாசித்து விடுகிறார்கள். ஆனால் இந்துக்களோ பலர் வேதங்களை வாசிப்பதில்லை. சில மதத்திலிருக்கும்; தன்னை மனிதாபிமானிகள் எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் இந்து சமுதாயத்தைக் கேலி செய்வதுண்டு. இவர்களுக்கு தெரியாதா அல்லது தெரிய மறுக்கிறார்களா எனத் தெரியவில்லை. இருப்பினும் சிலவற்றை கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியா என்னும் நாட்டில் மொழிகள் ஆங்கிலம், ஹீப்ரு, உருது, அரபு போன்ற ஒற்றை மொழி மட்டுமே இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். 2000 வருடங்களுக்கும் முன்னர் எழுதப்பட்ட, அதுவும் தமிழில் எழுதப்பட்ட திருக்குறளே இப்பொழுது பலருக்கும் புரிவதில்லை. காரணம் என்ன? காலம் தொட்டு மொழியாளுமையும், பயன்படுத்தும் சொற்களும் மாறி வருகிறது. இதனால் காலம்தொட்டு எழுதப்பட்ட ஏனைய பதிவுகள் இன்றைய தேதிக்கு அர்த்தம் கொள்ளக் கடினமானதாக இருக்கிறது. அதே போல வேதங்கள் இறை அருள் பெற்ற வேத ரிஷிகளால் அவர்களால் பேசப்பட்ட மொழியில் அந்தக் காலத்தில் எழுதப்பட்டது. இருப்பினும் வேதத்தை உணர்வது என்பது அத்தனை எளிதல்ல, அதற்கு ஒரு ஞானம் தேவைப்படுகிறது. இதை பாமரனும் உணர்ந்துகொள்ளும் விதம் சொல்லுவதற்கே ஏனைய ஏடுகள் உள்ளன. கீதை, மஹாபாரதம், இராமாயணம் போன்ற பதிவுகளில் இந்து மதக் கோட்பாட்டை தெள்ளிய முறையில் எழுதியிருக்கிறார்கள். அது என்ன வேதம்? பாமரர்களுக்குப் புரியாமல் என்றும் பலர் கேட்கக் கூடும். இந்து என்ற நெறியில் இந்து என்ற நெறியைக் காக்கும் சங்கம் என்றோ, இந்த மதத்திற்கு இவர்கள்தான் குருமார்கள் என்றோ என்றும் நியமிக்கப் பட்டதில்லை, ஏனெனில் இந்து என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை, அதை இந்தியத் திருநாட்டில் இருந்த அனைவரும் பயன்படுத்தி வாழ்ந்தனர். இந்து என்ற அமைப்பில் சுதந்திரம் என்பது வெகுவாகப் பாராட்டப் பட்டது. இந்து என்ற ஒன்றை ஒரு அலுவலகம் போலவோ, அரசு போலவோ மாற்றும் எண்ணம் எங்கேயும் தோன்றவில்லை, அதாவது இந்து எனப்படுபவன் யாரெனின், அவன் நான்கு வேதங்களையும் கற்க வேண்டும் என்றோ அல்லது இந்தக் கோவிலுக்கு வாராவாரம் அல்லது தினமும் செல்லுதல் வேண்டுமென்றோ யாரும் விதிமுறை இட்டதில்லை. இந்து மனிதனை தன் சொந்த மூளையின் திறனிலேயே இயங்கவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்து சமுதாயத்தில் பிறந்த ஒருவன் வேதங்களைக் கற்க ஆங்காங்கே பாடசாலைகள் அன்று இருந்தன, அதில் கற்று ஞானம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு உபதேசிப்பதுண்டு. ஆயினும் ஆடு மாடு மேய்ப்பவர்களும், கழனியில் தினக் கூலி பார்ப்பவர்களுக்கும் அத்தகைய வேத நூல்கள் தேவைப்பட்டதில்லை, அதற்கு பதில் பூஜை புனஸ்காரம் என்று தெருவிற்கு ஒரு கோவில் வைத்து அதன் வழியே வாழ்க்கைக்குத் தேவையான நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டதே போதுமானதாக இருக்கிறது. இப்பொழுது இருக்கும் பல மதத்திற்கும் வெகு முந்தியது இந்து என்பதாலும் பல ஆயிரம் வருடங்களாக மாபெரும் நிலப் பரப்பில் அது பரவிக் கிடப்பதினாலும், ஒற்றைக் குடையின் கீழ் அதை யாரும் நிலைநிறுத்தவில்லை, மாறாக இருப்பது அப்படியே என்ற தத்துவத்தின் பேரில் அது வளர்ந்திருக்கிறது.

ஆயினும் மனிதர்களின் மனம் நாமறியாததல்ல, பல அரசர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தனக்கான மக்களை தன் நிழலில் வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். ஆயினும் உலகின் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இறையான்மையோடும் அன்போடும் வாழ்ந்த பல அரசர்கள் தோன்றிய புண்ணிய பூமி இந்த இந்து பூமி என்பதையும் மறந்துவிடக் கூடாது. காலப் போக்கில் உலகின் மற்ற மூலைகளில் அப்பொழுதுதான் மதம் முளைவிடத் தொடங்கியிருந்த காலத்தில் இந்து மதம் பழுத்த மரமாகிவிட்டிருந்தது, அதனால் கல்லடிகளும் படத் தொடங்கியிருந்தது. சமயம், சாதி என்னும் முறைகள் ஆரம்ப இந்து காலத்தில் வெறி இல்லாமல் மட்டுமே இயங்கியிருக்கிறது. ஒரு தொழில் மேம்பட செய்யப்பட வேண்டுமாயின், அந்தத் தொழில் தலைமுறை தலைமுறையாக வளர்க்கப் பட வேண்டும். சிலை செய்வது எல்லோராலும் முடியாத காரியம், அதற்கு தேர்ந்த ஞானம் தேவைப்படுகிறது, அதே போல் ஆடு மாடு மேய்த்தல். இது போல சமுதாயத்திற்கு தேவையான பல தொழில்களை, குறிப்பிட்டவர்கள் என்று அன்றி சிலர் செய்ய ஆரம்பித்து பின்னர் அதுவே பரம்பரை பரம்பரையாக தொடரப் பட்டிருக்கிறது. அதுவே பின்னர் அவர்களுக்கு அடையாளமாகிப் போக, அதே சமயங்கள், சடங்குகள், அந்தந்த சமயத்தின் குருமார்கள் என வலுப்பெற ஆரம்பித்த சமயம் சாதிய முறைகளுக்கு நடுவே வெறி புகுத்தப் பட்டிருக்கிறது.

ஒரு சிறிய நகரத்தில் ஒருவரால் தோற்றுவிக்கப் பட்ட மதம் போல் இந்து முறை வளராமல், அது பரந்த இந்து பூமியில் பல்வேறு மக்களாலாலும் வளர்க்கப் பட்டதால் அதற்கென்று அடையாளப் புத்தகம், இன்ன இன்னதைப் பின்பற்றவில்லையென்றால் நீ கேள்வி கேட்கப் படுவாய் தண்டிக்கப் படுவாய் என்று ஒரு மத குருமார்களின் சங்கமும் அன்றில்லாமல் போனது. இதனால் மட்டுமே சாதிய முறைகள் புகுந்த பொழுது அதைத் தடுக்கவியலாமல் போனது. மனிதர்கள் காட்டுவிலங்கிலிருந்து மனிதனாய் பிரிந்து நன்னெறியோடு வாழ ஆரம்பித்த காலத்தில் தனக்கான வழிமுறைகளை பண்பாடு என்னும் முறையில் வளர்த்த ஆதிகாலத்தில் இந்து என்ற ஒரு சமுதாயம் உருவாகியிருக்கிறது. ஆனால் இன்றைய அளவில் சிவன், விஷ்ணு, பிரம்மா, ஆதிபராசக்தி போன்ற உருவங்களை மட்டுமே வைத்து இந்துக்களில் பலரும், மற்ற மதத்தவர்களும் இந்து என்ற சமுதாயத்தை நோக்குகிறார்கள். இது அடிப்படைத் தவறாகும். நான் இந்துவாக இருந்து கொண்டே மேற்சொன்ன கடவுளர்களை வழிபாடாமலும் இருத்தல் சாத்தியம். ஆனால் இந்த சுதந்திரம் மற்ற மதத்தில் இருந்ததில்லை, காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும், இந்து என்பது புத்தர், நபிகள், இயேசு போன்றோரால் நிறுவப்படாத ஒன்று, அது ஒரு விதை விருட்சமானது போல மெல்ல மெல்ல வளர்ந்தது. ஏடுகளும் தாள்களும் இல்லாத காலத்திலிருந்தே வளர்ந்து வருவது. பல ஆதார ஏடுகள் காலப் போக்கில் அழிந்து போனதும் கூட. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த சமுதாயம் ஒவ்வொரு கதைகளை புனைந்துவிட்டு புராணத்தோடு அதைச் செருகியதும் நடந்திருக்கிறது என்பதும் கண்கூடாக தெரிகிறது. பல புராணக் கதைகளில் சாமானிய மனிதனின் பார்வையில் படும் குடும்ப முறைகளும், அங்கே ஒரு பாமரனின் அறிவில் தோன்றும் பிரச்சினைகளும் அதற்கான் தீர்வுகளும் இருப்பதே அதற்கு சாட்சி. இருப்பினும் குழந்தைகளுக்குப் போதிக்கப்படும் நீதிக்கதைகள் போலானவை என அவைகளை எடுத்துக் கொள்ளலாம். பல நீதிக்கதைகள் பிசகுள்ளவைதான், இருப்பினும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

அரசர்கள், இவர்களின் பங்கு மிகப் பெரியது. சாமானிய மக்களுக்கு அரசனே தெய்வம். அதாவது அரசனெனப்படுபவன் வேத சாஸ்திரங்களைப் படித்து, இருப்பினும் அந்த சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்கும் மற்றும் தகுந்த நேரத்தில் தகுந்த அறிவைப் புகட்டும் குருமார்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு மக்களைக் காத்தவர்கள். அவன் மூலமாகவே கல்வி, அதாவது கல்வி என்பது இந்து என்ற சமுதாய அறிவையும் சேர்த்து, எல்லாவற்றையும் பெற்றனர். ஒரு அரசன் இங்கனம் நடத்தல் வேண்டும் என்ற கோட்பாடுகள் இருந்தன, அவன் மக்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று இருந்தன. காலம் போகப்போக அரசர்களும் சுயநலக் கிருமிகளாக மாறத்தொடங்கினர். அதன் விளைவே பாமரர்களின் பார்வையிலிருந்து அறிவு மறைக்கப் பட்டதும், ஒடுக்கப்பட்டதும். அந்த நேரத்தில் அரசனுக்கு சமமான பண அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. ஆகவே மக்களும் முறையாக இந்து சமுயதாயத்தில் குறிப்பிடப்பட்டவையைத்தான் வழிதொடருகிறோமா இல்லையா என்றும் தெரியாமல் அந்த அந்த ஊர் கோவில்களே கதியென்றும், பின்னர் புகுத்தப்பட்ட சமயமே கதியென்றும் திரிந்து போயினர்.

பிற எந்த மதங்களும் இல்லாத காலம்தொட்டே இருந்து வரும் இந்து சமுதாயத்தில் இடையில் பரப்பப்பட்ட மற்ற மதங்களால் இந்து கேள்வி கேட்கப் படுவது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் இவர்கள் இந்து என்ற ஒன்றை ஆராயாதவர்கள், இந்து என்ற அமைப்பு ஆயிரம் அடி உயரம் என்றால், இவர்கள் தன் ஆறடி உயரத்தின் சமதளத்தில் சாதிய முறைகள் புகுத்தப் பட்ட தற்காலத்து இந்து மதத்தை வைத்து இந்து சமுதாயத்தைக் கேலி பேசுகிறார்கள். இவர்களைக் குற்றம் கூறியும் ஒன்றுமில்லை, ஏனெனில் இந்து மதத்தில் இருப்போர்களில் பலருக்கே இந்து சமுதாயம் பற்றிய ஞானம் இல்லாதது வருந்தத்தக்கது. இருப்பினும் ஒரு மதத்தின் ஆணி வேரையே புரிந்து கொள்ளாமலும் ஒரு சமுதாயம் வாழக் கூடிய அளவிற்கான அதிகபட்ச சுதந்திரம் உள்ள சமுதாயம் இந்து என்பதில் நான் மகிழ்கிறேன். இந்து முறையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களும் இந்துவிலிருந்தே வந்தவர்களென்பதாலும், அத்தகைய சுதந்திரத்தைக் கூட ஒருவனுக்கு இந்து சமுதாயம் வழங்குகிறது. இந்தியாவிலேயே காதல் கலப்பு திருமணங்கள் அதிகம் ஏற்படுவதும் இந்து சமுதாயத்தில்தான் நடக்கிறது. ஆக வெகு விரைவில் இந்த சாதிய முறைகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது. அதேபோல் பல இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் என சொல்லப்படும்போது எப்படி உண்மையை உணர்ந்த முஸ்லீம் வருத்தப்படுகிறானோ அதே போல இந்து சமுதாயம் என்றதும் சாதிக் கூத்துகளைப் பேசி, சாதி என்ற ஒன்றில்தான் இந்து சமுதாயமே இருக்கிறது என்று பலர் கூறும்போதும் ஒரு உண்மையான இந்து வருத்தப்படுகிறான். எப்படி அந்தத் தீவிரவாதிகள் மதத்தின் பேரைச் சொல்லிச் செய்தாலும் அறியாமையில் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களோ அதே போல இந்த இந்து சமுதாயத்தில் சாதிய வெறி முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்களும் மதத்தின் மீதுள்ள அறியாமையில் செய்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சாதி என்பது மதத்திற்குள்ளானதே அல்ல. அது சமுதாயத்திற்குள்ளானது, அதாவது இந்து சமுதாயத்திற்கு உள்ளானது எனக் கூறவில்லை, மக்கள் வாழும் சராசரி சமுதாயத்திற்குள்ளானது. இன்றும் பல தமிழகக் கிருத்துவர்கள், சாதி பார்த்துத்தான் பெண் கொடுத்து எடுக்கின்றனர், என்பதும் நான் கண்கூடாக கண்டறிந்தது. ஆக இவர்களுக்கு கடவுள் எதுவானாலும் சாதி என்பதில் நிலையாக இருக்கிறார்கள். ஆகவேதான் கூறுகிறேன் சாதி என்பது இந்து மதத்திலுள்ளது அல்ல, அது மக்களின் வாழ்க்கையைச் சார்ந்தது. இந்து சமுதாயம் ஒரு போதும் சாதிக் கொடுமைகளை அதன் கோட்பாடுகளில் ஆதரிப்பதில்லை, மற்றபடி இன்ன பிறக்கள் புகுத்தப்பட்டவையே! விவேகானந்தருக்கு அடுத்து யாருமே இந்து என்ற சமுதாயத்தை சரியான தொனியில் உச்சரித்ததில்லையோ என்றே எனக்கு தோன்றுகின்றது!இவையெல்லாம் எனக்கு தோன்றும் சில கருத்துக்கள். பொதுவாகவே ஆண் முரட்டு சுபாவம் கொண்டவன். எப்படி ஒரு தீக்குச்சி விளக்கெரிக்கவும் வீடெரிக்கவும் பயன்படுகிறதோ அதே போல்தான் ஒரு ஆணின் கோபமும் இருக்கிறது. என்னுடன் பழகிய, அல்லது நான் பழகிய பல நபர்களில் பல ஆண்கள் தத்தம் தங்கைகளை, அக்காக்களை யாராவது கேலி செய்தாலோ, ஈவ் டீஸிங் செய்தாலோ தயங்காமல் அடிதடியில் இறங்கிவிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆக தன்வீடு என்று வரும்போது ஒரு கோபம் சமுதாயத்தைச் சூறையாடும் அளவிற்கு ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி இருப்பவர்கள் 100% பெண்களைக் கேலி கிண்டல் செய்யாமல், அவர்களை துஷ்பிரயோகம் செய்யாதவர்களா எனக் கேட்டீர்களானால் இல்லையென்றுதான் சொல்லுவேன். ஏனெனில் அவர்களே சில பெண்களை சைட் அடிப்பதும், அளவுக்கு மீறி அவதூறான சொற்களால் கிண்டலடிப்பதும் (அப்பெண்களின் காதில் படாதவாறு) உண்டு. எனது பள்ளிப்படிப்பின் பொழுது நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தின் பொழுது தன் வீட்டில் நடக்கும் பொழுது கோபப்பட்டவன் இன்றைக்கு அடுத்த பெண்ணை கிண்டல் செய்கிறானே என்று எனக்குத் தோன்றினதாலும் ஒரு மான உணர்வு ஏற்பட்டதாலும் இதுவரை நான் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை தவறான எண்ணத்தில். இதை நான் என் நண்பர்களிடமும் வலியுறித்திக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னால் எத்தனை பேர் திருந்துவது? எத்தனை பேர் பெண்ணுக்கு மரியாதை செலுத்த ஆரம்பிப்பது? ஆனால் ஒன்று நிச்சயம், எனக்கு இந்த குணம் முக்கால்பாகம் என் அப்பாவிடமிருந்து வந்ததுதான். என் அப்பா பெண்களுக்கு ஏக மரியாதை கொடுப்பவர், தாய், மனைவி இருவரையும் கண்கலங்க வைப்பவன் நல்ல மனிதனே இல்லையென்பார். நானும் அப்படியே வளர்ந்துவிட்டேன்.

ஒரு தந்தை தனது மகளை கொஞ்சம் அடக்கத்தோடு இரு, இல்லையெனில் உனக்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார் என்றால், ஒருவேளை அவருக்கும் ஒரு மகன் இருப்பானென்றால், அடுத்த கட்ட நடவடிக்கையாக தன் மகனிடம் "மகனே, உன் தங்கைக்கு சில நாய்களால் ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை நீ இன்னொரு பெண்ணுக்கு இழைத்துவிடாதே" என நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல சொல்லுதல் அவசியம். ஊரிலுள்ள பல பெற்றோர்கள் ஆணதிக்கத்தையே விரும்புவதாலும், தன் மகனின் போக்கில் அலட்சியம் காட்டுவதாலும், அவனை நல்வழிப் படுத்த முடியாமல் தோற்றவர்களுமேதான் தத்தம் பெண்களையும் வருங்கால சந்ததியையும் பெண்ணடிமை கொண்டு அழித்தவர்கள். ஒரு தந்தை தன் மகளைக் கிண்டல் செய்த ஒரு பொறுக்கியைத் திட்டித் தீர்த்துவிட்டு வீடு திரும்புகையில் தன் பையனை எவனோ ஒருவன் இப்படித் திட்டித் தீர்ப்பான் என்ற சொரணை வர வேண்டும், அந்தப் பையனுக்கோ இன்னொருவனின் தங்கை அல்லது அக்காள் இப்படி அவதிப் படுவாளோ நம்மாலென்ற எண்ணம் வர வேண்டும். ஆக இது ஆணிவேரிலிருந்து அழிக்கப் பட வேண்டுமாயின் குடும்ப அமைப்புகளிலே இது ஆரம்பிக்கப் படவேண்டும்.

ஒரு பெண்ணைக் கேலி செய்யும் ஆண் வானத்திலிருந்து குதித்து விடவில்லை, அவனும் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாகி, உருவாகி, பிறந்து, வளர்ந்துதான் வருகிறான். ஆக பெண்ணடிமையை எதிர்த்து, பெண் உணர்வு அழிப்பை எதிர்த்து, பெண் உடல் சிதைப்பை எதிர்த்து குரல் கொடுக்கும் இன்றையை பெண்களே முதலில் கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே ஒரு முறை பார்த்து கேள்வி கேளுங்கள் "நாம் நம் மகனை பெண்களை மதிப்பவனாக, பெண்களின் சம உரிமையை போதிப்பவனாக வளர்த்திருக்கிறோமா?" என்று. உங்கள் பதில் இல்லையென்று இருப்பதானால் நீங்கள் உங்களுக்காக வெட்கப்பட்டுக்கொண்டு, மறுமுறை சம உரிமை பற்றிப் பேசாதீர்கள், அல்லது உங்கள் மகனை திருத்திவிட்டு பிறகு சம உரிமை பற்றிப் பேசுங்கள். சின்ன வயதிலிருந்தே தன் மகனை வாராவாரம் கோவிலுக்குக் கூட்டிச் சென்று, இறைவனையும், பக்தியையும் போதிக்கும் பெண்ணினமே முதலில் உன் மகனுக்கும் மகளுக்கும் பெண்ணுரிமையின் தாகத்தை, அதன் அவசியத்தை விளங்கவை, பெண் அன்பை போதிக்கும் முதல் கடவுள் என்பதை புரிந்து கொள்ள வை. குழந்தையை அபாக்கஸில் சேர்த்து படிப்பை போதிக்கும் பொழுதே அக் குழந்தையை சமூகத்தினில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று பழக்கு, முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் (அதாவது மேலை நாட்டில் ஒரு பழக்கமுண்டு good touch, bad touch என்று, ஒரு குழந்தையின் மர்ம பாகத்தை தாய் தொட்டுக் காண்பித்து இது bad touch என்றும், கை போன்ற இடங்களைத் தொட்டுக் காண்பித்து good touch எனவும் சொல்லித் தருவாள். ஒவ்வொரு முறை பள்ளி முடித்து குழந்தை திரும்பியதும் யாராவது bad touch செய்தார்களா என அறிந்து கொள்ள இது உதவும்) போன்றவற்றை சொல்லித் தருவதால் பெண் குழந்தை அறியாமையில் எங்கும் வீழ்ந்திடாது பாதுகாக்கப் படுகிறது. இதுதான் ஆக சிறந்த வழி, ஒரு சமுதாயம் நிரந்தரமாய்த் திருந்தவேண்டுமெனில் குடும்ப அமைப்பே முதலில் திருந்த வேண்டும். ஆனால் இதற்கு காலம் பிடிக்கும். எத்தனை காலம் பிடிக்கும்? ஐந்து வருடத்திற்கு முன்னர் பிறந்த குழந்தையிலிருந்து இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகள் தத்தம் காளையர் வயதை அடையும்போது ஒரு திருந்திய சமுதாயத்தை நாம் உருவாக்கி விட்டிருப்போம். அதாவது அதிக பட்சம் 16 முதல் 20 ஆண்டுகள். பல காலமாக வரும் பெண்ணடிமை யுகத்தில் இந்த ஆண்டுகள் சொற்பமே என்று எண்ணுதல் வேண்டும். ஆயினும் இத்தனை ஆண்டுகளில் நாம் ஒரு திருந்திய சமுதாயத்தை ஏற்படுத்தியிருப்போம் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

மேலும் இன்றைய உலகில், பல பெண்கள் குறைந்தது 12ம் வகுப்பு வரையாவது படிக்கிறார்கள். ஆக அவர்களுக்கு ஏற்பறிவாவது இருக்கும். தன் குழந்தைகளை வளர்க்கும்போது எப்படிப் பட்டவனாக வளர்க்க வேண்டுமென்று அவளுக்கு புரியும் அல்லது நாம் புரியவைத்தல் வேண்டும். இது ஒரு பதினாறாண்டுகால திட்டம். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுமுனையில் சில ஓராண்டு திட்டம் முதல் ஐந்தாண்டு திட்டங்கள் வரை ஆரம்பிக்கப் படவேண்டும். அதாவது இன்றைய தனியார் அலுவலகங்களில் குறைந்தது 100 பெண்கள் வேலை பார்க்குமிடத்திற்கு அரசாங்க பரிந்துரை வேண்டுமானால் அதற்கு பெண்களுக்கு கவுன்சலிங், குறைகேட்கும் வசதி செய்யப் பட்டிருக்கவேண்டும் என்ற அரசாணை போன்றது. இது போல பல அரசாணைகள் சுகாதாரம் போன்றவைகளுக்கு இருந்தாலும், அவையெல்லாம் ஒழுங்கான முறையில் நடப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், 100ல் ஒரு நிறுவனமாவது இதை ஒழுங்காக கடை பிடித்தாலும் நமக்கு நன்மைதானே! இப்படிப்பட்ட பெண்கள் குறை தீர்ப்பு மையம் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் அதை எதிர்த்து ஸ்ட்ரைக் போன்ற போராட்டங்களை முன்னிருத்தி நடத்த அகில இந்திய பெண்கள் குறை தீர்ப்பு மைய சங்கம் ஒன்று நிறுவப் பட வேண்டும் (இந்திய மாணவர்கள் படை என்பது போல, செயல் சுத்தமானதா என விவாதிக்க இது நேரமில்லை, அங்கேயும் ஓட்டைகளென்பதும், கையூட்டுகள் என்பதும் இருக்கத்தான் செய்யும், ஆயினும் எங்கே தன் வாசலில் கொடி பிடிப்பார்களோ என்ற அச்சமும் நிறுவனத்திற்கு கொஞ்சம் இருக்கும்). முக்கியமாக இந்த துறையைச் சார்ந்தவர்களில் ஒரு ஆண்களும் இருத்தல் கூடாது, அனைத்து பதவியிடங்களும் பெண்களாலேயே நிரப்பப் படவேண்டும். என்னிடம் யோசனை கேட்டால் ஒவ்வொரு பெரிய நிறுவனமும் எப்படி செக்யூரிட்டி வேலைக்கு பல தனியார் நிறுவனங்களை சார்ந்து அங்கிருந்து பணியாட்களை எடுத்துக் கொள்கிறதோ அதே போல சமூக நல வாரியங்களான லயன்ஸ் க்ளப் போன்ற இடங்களிலிருந்து முழுக்க முழுக்க ஆண்களின் பார்வைக்கு கீழே வராத ஒரு பெண்கள் சார்ந்த மையத்திலிருந்து ஆட்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஓய்வு பெற்ற சிறந்த பெண் நீதிபதியை இந்த அகில இந்திய பெண்கள் குறை தீர்ப்பு மையத்தின் தலைமையாக நியமிக்கலாம். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இந்தத் தலைமை மாற்றப்படவேண்டும், ஒரு குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கப் படுகிறாரோ அதே போல (இதை வாசித்த பொழுது சிலர் சிரித்திருக்கக்கூடும், குடியரசுத் தலைவரின் சக்தி பற்றி இந்தியா அறியாததா என, இருப்பினும் அப்படி ஒருவராவது நமக்கு இருத்தல் அவசியம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்).

இந்த பதினாறாண்டுகால திட்டத்தின் முதல் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், எப்படி செயலாற்றுவது என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். என் பங்கிற்கு ஒரு வழி நான் சொல்லுகிறேன். ஒவ்வொரு வருடமும் அரசாங்க பெண்கள் சம உரிமை நாள் ஒன்றை ஏற்படுத்தி, அதாவது ஜனவரி மாதத்தின் முதல் வேலைநாள் போன்ற நாட்களைத் தேர்ந்தெடுத்து, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரிகள் இவையனைத்திலும் பெண்களின் சம உரிமையைப் பற்றி வகுப்புகள் எடுக்கப் படவேண்டும். அன்றைய தினத்தில் மாணாக்கர்களுக்கு விடுமுறையை அளிக்காமல், அரங்கத்தில் வைத்து அவர்களுக்கு நான் மேலே கூறிய கருத்துக்களை நாம் கற்பித்தல் வேண்டும். மீதத்தை நீங்கள் சிந்தித்து சொல்லுங்கள்.

காலம்
என்னையொரு வெள்ளைத்தாளாகவும்
உன்னையொரு பேனாவாகவும்
எழுதிச் சென்றது

நீ
என்னிலெழுதிப் போன
எழுத்துக்களால் அர்த்தம்
பெற்றுவிட்டேன்

நிரப்பிய உனக்கெப்படி
புரியாமல் போனது
காலம் என் உறையில்
உன் முகவரியைத்தான்
எழுதியிருக்கிறதென்று?!
என்னுள்ளிருந்த மிருகம்
வெளிப்பட்டது இதுவே
முதல் முறையாயிருக்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ
நீ உடைத்து விட்ட
புகைப்படத்தின்
கண்ணாடிக் கூடு
காட்டியது என்
நடுங்கும் விரல்களையும்
உடைந்த மனதையும்.

என் அணுக்கள்
எல்லாம் பரவிக்கிடக்கும்
என்னவள் இப்பொழுது
ஒரே ஒரு புகைப்படத்தில்தான்
உயிர் வாழ்கிறாள்.

கண்கள் கடந்து
விழுந்தது கண்ணீர்
வழியே உன் தாய்
மீதான பாசம்.

உன் பிஞ்சுக்
கரங்களால் என்
கன்னத்தில் கைவைத்து
"அழாதே அப்பா"
என்றாய்.

உடைந்த கண்ணாடியில்
அவள் முகம் மேல்
உன் பிம்பம்!
யாருமற்ற வெளியில்
உன்னைக் கடந்தபோது
ஒரு வினாடி
என்னைப் பூசிக்கொண்ட
போலி நீ!

என்னை
உள்ளிறக்கிக் கொள்வது போல்
பாசாங்கு காட்டுகிறாய்.

நான்
தள்ளிப் போனதும்
அடுத்த பிம்பத்திற்குத்
தயாராய் நீ!