கண்ணாடியொன்றை
கொண்டு வந்தாள் அவள்
நாமிருவரும் இதன்முன்
தலைவாரிக் கொள்ளலாமென்றாள்
கண்ணாடியில் அவள் பிம்பம்
படியும் நேரம் அதிகமாகிப்போனது
கண்ணாடியும் அவளும்
கதை பறிமாறிக்கொண்டனர்
கண்ணாடியில் கவிதைகள் கிறுக்கினாள்
கண்ணாடி அதை வாங்கி
அவள் பிம்பத்தில் பதித்தது
கண்ணாடியுடன் ரகசியங்களும்
என்னுடன் தூரங்களும்...
தூரப் படுக்கையறையில்
துயில் கலைந்து விழித்தபொழுது
கண்ணாடியும் அவளும்
பேசிச் சிரிக்கும் சப்தம்
பேய்மழையென பெய்தது
என்னை விட அவளுக்கு
கண்ணாடி முக்கியமாகிப் போனது
நான் தலைவாரச் செல்லும்போது
கவிதைப் பேனாக்களை
மறைத்துக்கொண்டு
சீப்பைத் தேடித் துழாவுகிறாள்...
என்ன செய்கிறாய் என்றேன்...
”தலைவார வந்தேனென்றாள்”.