ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

- சிறுகதை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. சுட்டி http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

சில நாட்களாகவே ஊருக்கு புதிதாய் வரப்போகும் பேருந்து நிலையத்தைப் பற்றிய பரபரப்பு பேச்சுகள் அதிகரித்திருந்தன. முக்கியமாக ஊருக்கு நடுவில் வரப் போவதால் சுற்றியுள்ள புறம்போக்கு இடங்கள் அகற்றப்படுமென்ற ஒரு அச்சமும் பலரிடம் இருந்தது. அதில் பாதிக்கப்பட முடியாத இடத்திலிருந்தவர்களில் பலர், "ஊருக்கு நல்லதுன்னா எடத்தை கொடுத்துத்தானே ஆகணும்" எனவும், இடத்தை இழக்கும் அபாயத்திலிருப்பவர்களோ, "இந்த ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வந்து என்ன ஆகப் போகுது, இந்த ஊர்ல இருந்து எந்த பஸ்ஸும் கிளம்புறது இல்லை, வர்ற பஸ் ஒரு நிமிசம் நின்னுட்டு போகுது, இதுக்கு எதுக்கு எடத்தையெல்லாம் இடிக்கணும்" எனவும் பலவிதமான குரல்கள் எழுந்த வண்ணமிருந்தன. பேருந்து நிலையத்திலிருந்து நூறடி தூரத்திலிருக்கும் எங்களது வீட்டையும் இடிக்கப் போவதாக சொல்லிச் சென்றார்களாம். அந்த ஊர் பிறந்த போதே அங்கு கட்டப்பட்ட நான்காவது வீடு எங்களுடையதுதான். முப்பதுக்கும் மேற்பட்ட வருடம் அங்கேதான் வசித்து வருகிறோம். அப்படியே பெருக ஆரம்பித்த வீடுகளால், வந்து போகும் பேருந்துகளும் அங்கேயே நிறுத்தப் பட்டன. இப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வந்துவிட்டன. ஊருக்குள் சில பிரிவினருக்குள் சண்டை வேறு, அதனாலேயே ஒரு பிரிவினர் கொஞ்சம் கூடுதலாக வாழும் அந்தப் பகுதியில் பேருந்து நிலையத்தை அமைத்து பல வீடுகளை இடிப்பதற்கு திட்டம் போட்டனர்.

இது போன்ற பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே அப்பாவிடம் அவ்வப்பொழுது ஏதும் பிரச்சினையா எனக் கேட்டுக் கொள்வேன். அன்று அப்பாவிற்கு போன் செய்துவிட்டு வைத்ததிலிருந்தே மனசு பாரமாகிவிட்டது. "நம்ம வீட்டையும் இடிக்கப் போறாங்களாம்ப்பா, அளந்து போட்டுட்டு போயிட்டானுவ, இப்போதைக்கு பின்னால இருக்க உங்க அண்ணன் வீட்ல தங்கிக்கணும், வேற வழியில்லப்பா" அவர் சொல்லிவிட்டு முடித்த சொற்கள் காதுக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. எங்கள் வீட்டில் நானும், என் அண்ணனும்தான். அவனுக்கு கல்யாணம் முடிந்த கையோடு எங்கள் வீட்டை ஒட்டி பின்னால் இருந்த இடத்தை வாங்கி, அதிலேயே வீடும் கட்டிக் கொண்டான். எங்கள் வீடு அளவிற்கே அதுவும் இருக்கும், இரண்டு இடத்தையும் சேர்த்தால் ஒரு பெரிய சதுரம் போல இருக்கும். ஆனால் அவன் இருப்பதோ பட்டா இடம். அண்ணனிடம் அப்பா "மிச்சமிருக்க இடத்துல உன் தம்பியும் நாங்களும் வீட்டை கட்டிக்கலாமாப்பா, எல்லோரும் ஒன்னா இருக்கலாம்" எனக் கேட்டதற்கு "இல்லப்பா, எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க, எடத்தையெல்லாம் கொடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டான் என வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.

சென்னையில் வேலை பார்க்கும் நான் பணி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி இருந்ததால் சரியான நேரத்தில் அப்பாவிற்கு உறுதுணையாக இருக்க முடியாமல் போய்விட்டது. இது ஒரு சிறிய அலுவலகம்தான். நான் படித்தது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், மேலும் படிக்கவும் இயலவில்லை ஏதேதோ சின்ன சின்ன காரணங்களால், ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் என்னருகே வராததும் வேறு பெரிய நிறுவனங்களுக்கு போகவிடாமல் என் காலை அந்த அலுவலகத்திலேயே கட்டிப் போட்டிருந்தது. இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்து இப்பொழுது மூன்று வருடம் கழித்து பனிரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அன்று காலையே விட்டை இடித்திருக்கக் கூடும், நான் அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டு காலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே கோயம்பேடு வந்து ஊருக்கு கிளம்பிவிட்டேன். சன்னலருகே கிடைத்த ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே தொடர்ந்தது என் பயணம். முந்தைய இரவின் விமானப் பயணத்தின் களைப்பும், தூக்கமின்மையும், வீட்டைப் பற்றிய எண்ணங்களும் சேர்ந்து கண்களில் ஒரு சோர்வையும், கொஞ்சம் கண்ணீரையும் பரிசளித்தபடி இருந்தன. இதற்கு முன்னர் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும், நான் ஓடி விளையாடிய அந்த வீட்டிற்கு மீண்டும் செல்கிறேன் என்ற களிப்பு இருக்கும்.

அது ஒரு அழகான வீடு. வீட்டின் முற்றம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மரம்தான் இருக்கும். அங்கே இருக்கும் புளியமரத்தின் கிளைகள் நான் சிறு வயதாய் இருக்கும் பொழுதே எட்டும். உயரமாக வளர வேண்டுமென்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்குவேன். அதிலிருக்கும் புளியம்பழத்தையும், குருத்து இலைகளையும் தின்பதுண்டு. அதன் நிழலில் அமர்ந்து கொண்டு நண்பர்கள் பட்டாளத்தோடு கதை பேசுவதும், சின்னக் குழி தோண்டி, தண்ணீர், கொஞ்சம் இலை, மற்றும் பெயிண்ட் எல்லாம் கலந்து ஒரு புட்டிக்குள் ஊற்றி அதை புதைத்து, கொஞ்ச நாள் கழித்து எடுத்து பார்ப்போம். பக்கத்திலேயே கொடுக்காப்புளி மரமிருக்கும். நீள துரட்டி வைத்து அதிலிருக்கும் பழங்களைப் பறித்து தின்போம். வாழை, மாதுளை, கொய்யா, நார்த்தை, கருவேப்பிலை, துளசி, கத்தாளை, முருங்கை என மரங்களும் செடிகளுமாக இருக்கும். காலையில் ஒவ்வொருவரும் குளிக்கும்போதும் ஒவ்வொரு மரத்தடியில் நின்று குளிப்போம், குளிக்கும் தண்ணீர் அந்தந்த மரத்திற்கு போய்ச்சேரட்டுமென்பதற்காக. என் அப்பா இரும்புப் பட்டறை வைத்திருப்பதால், எங்களுக்குத் தேவையான அரிவாள், துரட்டியில் இடும் இழுவை கொக்கியென சகலத்தையும் செய்து கொள்வோம்.

அம்மாவிற்கு காலைப் பொழுதுகள் ஆட்டுக்கும், மாட்டுக்கும் தீவனம் போடுவதிலும், எங்கள் வீடு, அண்ணன் வீடு முற்றம் வரைக்கும் காலை ஐந்து மணிக்கே எழுந்து தூற்றுப் பெருக்குவதிலுமாக விடியும். உடம்பிற்கு முடியாமல் போன காலத்தில் கூட அவள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பதை நிறுத்தவில்லை. சாயங்காலம் ஆகிவிட்டால் திண்ணைக்குத் தண்ணீர் தெளித்து வைப்பாள், பிறகு நாங்கள் வளர்க்கும் பசுவிடம் செல்லமாக பேசிவிட்டு பால் கறந்து காப்பி போட்டுத் தருவாள், மீதமுள்ள பாலை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து வாங்கிவிட்டு போவார்கள். எந்த ஊர் விழாவிற்கு போனாலும் இரவே வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் அவளுக்கு, வேறு எங்கு தங்கினாலும் தூங்க முடியாமல் சிரமப் படுவாள். வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும், நாங்கள் நால்வரும் சேர்ந்தே சுண்ணாம்பு அடிப்போம்.

அப்பாவிற்கு கிளி, நாய், பூனை வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. ஒன்றுக்கொன்று எதிரி என படித்த பாடங்களனைத்தும் தோற்று மண்டியிடும் எங்கள் வீட்டில் அந்த சிநேகித பிராணிகளுடன். அப்பொழுதெல்லாம் அடிக்கடி அப்பா சொல்லுவார் "வளர்ப்புலதான் இருக்கு பொழப்பு" என்று, அது பசுமரத்து ஆணி போல பதிந்து போனது. இதை நினைக்கும்போதே ஏதோ ஒரு சின்ன சம்பந்தத்துடன் அண்ணனின் நினைவு வந்து போனதையும் தடுக்க முடியவில்லை. என்னையும் அவனையும் ஒன்றாகத்தான் வளர்த்தார்கள், அவனுக்கு மட்டுமெப்படி பாசம் குறைந்து போனது, அப்பா கேட்டும், கொடுக்க முடியாதென கூறுவதற்கு காரணம் அவன் மட்டும்தானா இல்லை அண்ணியுமா? எப்படியோ குடும்பத்தைப் பிரிக்க இது ஒன்றே போதுமானதாகிவிடுமோ? இந்த நினைப்புகள் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை, அதை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். என்ன இருந்தாலும் அவன் அண்ணன், அவனுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் எதையாவது விட்டுச்செல்ல ஆசை இருக்கத்தான் செய்யும், அவன் வாங்கும் சம்பளமும் குறைவு, என்ன செய்வான் பாவம்? அப்பாவையும் அண்ணனிடம் கோபம் கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பதிந்தது. தவிர நானும் ஓரளவிற்கு மாதம் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் வரை சேமிக்க முடிகிறது. இதுவரை என் சம்பளத்தை அம்மா பேரில் கிராமத்து கூட்டுறவு வங்கியில் சேமித்துத்தான் வைத்திருக்கிறார் அப்பா. அதில் இருக்கும் பணத்தை வைத்து ஊர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தை வாங்குவது பற்றிய பேச்சும் முதலில் வந்து போனது. அண்ணனின் மறுப்பிற்கு பிறகு, அந்த இடத்தை அப்பா வாங்கினார்.

ஊருக்கு செல்லும் கடைசிப் பேருந்தைப் பிடித்து சென்று கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல வீட்டு ஞாபகம் என் நெஞ்சைத் துளைக்க ஆரம்பித்தது. இரண்டு நெற்குதிர்களுக்கு நடுவில் கண்ணாமூச்சி ஆட்டத்தின் போது ஒளிந்து கொண்டது, அம்மியில் சட்னி அரைத்து கொண்டிருந்த அம்மாவின் கழுத்தைப் பின்னாடியிருந்து கட்டிப் பிடித்து ஆடியது, அண்ணன் என்னை அடிக்கத் துரத்தி வந்த பொழுது ஓடிப் போன நான் அடுக்களையில் அரைத்து வைத்திருந்த தோசை மாவை கொட்டிக் கவிழ்த்தது, புளியமரம், அப்பாவின் இரும்புப் பட்டறை, அங்கு துருத்தி ஊதவும் அப்படியே உலகக் கதை பேசவும் வருகின்ற அப்பாவின் வயது ஒத்தவர்கள், மார்கழி காலத்தில் வீட்டு வாசலில் இடும் கோலம் அப்பொழுது அம்மாவிடம் "யம்மா, ஏம்மா நம்ம வீட்டு கோலத்துல மட்டும் நடுவில சாணி வச்சு பூ வைக்கல" எனக்கேட்ட சிறுபிள்ளைக் கேள்வி, அதற்கு "வயசுப் பொண்ணுங்க இருக்க வீட்டுல வைப்பாங்க, இங்க யாரு இருக்கா" என அம்மா சொன்ன பதில், அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அடம்பிடித்த தருணங்கள், என்னை விட உயரமான அடிகுழாயின் கைப்பிடியை தொங்கிக் கொண்டே குதித்து குதித்து அடித்தது, கிளிக் கூண்டு, மூன்று மாதம் முன்பு நான் நட்டு வைத்த மாஞ்செடியொன்று இப்படி நினைவு துளிகள் ஒவ்வொன்றும் கண்ணீராக வழியத் தொடங்கியது, தொண்டையின் எலும்பு விக்கி விக்கி எச்சில் வற்றி மேலும் முடியாமல் கீழேயே நின்று விட்டது, நடத்துனர் "ஏ சுந்தரம் மகந்தானே நீயி, எறங்குப்பா, ஓன் ஊரு வந்துருச்சு" எனக்கூறி தோளைத் தட்டிய போதும் எனக்கு அந்த இடம் நினைவுக்கு வராததாய் இருந்தது.

விடிய விடிய யாராவது நின்று பேசிக் கொண்டே இருக்கும் பஜார் எங்கள் ஊரினுடையது, இப்பொழுது ஆளே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டு பேருந்து எதிரெதிரே வந்தால் நிதானித்து மட்டுமே ஒன்றுக்கொன்றை கடந்து போகும் சாலையில், இப்பொழுது நான்கு பேருந்து ஒன்றாய் செல்லக் கூடிய அளவிற்கு இடம் இருக்கிறது. லெச்சுமி அக்கா வீடு, பாக்கியமாச்சி வீடு, பண்டார மாமா வீடு, மூக்கைய்யா அண்ணன் வீடு, செல்வன் கடை, ஸ்டீபன் கறிக் கடை, கீழ் வீட்டுப் பாட்டியின் பசு மாட்டுத் தொழுவம், என இடமும் வலமும் வெற்றிடமாகவே இருந்தது. என் வீடு இருந்த இடத்தை புளியமரம் மட்டும் ஞாபகப் படுத்தியது எனக்கு. செங்கல்களும், கட்டைகளுமாக பரவிக் கிடந்தது. உடைந்த கற்களின் மீது அப்பா உறைந்து உட்கார்ந்தபடியே இருந்தார். அண்ணன் வீட்டில் எல்லோரும் தூங்கியாயிற்று, அம்மாவும் ஒரு கயிற்றுக் கட்டிலில் அசதியில் தூங்கியிருந்தாள்.

அப்பாவை அப்படிப் பார்த்ததும் கதறியழத் துவங்கிவிட்டேன். என்னைச் சமாதனப் படுத்த அப்பா பல ஆறுதல் கூறிவிட்டு "கிறுக்குப் பயலே இதுக்கெல்லாம் அழுதா கதைக்கொப்புமா, ஊரே இடிஞ்சு போச்சு, இனி ஆக வேண்டிய சோலிய பாப்பியா, அழாதல அழாதல" என கூறிக் கொண்டிருக்கும்போதே அவரின் குரலும் கம்மியது. அழுது விடக் கூடாதென தொண்டையை இருமிக் கொண்டே, போயி சாப்பிடு "ஏ மாரி, உம்புள்ள வந்துட்டான், அவனுக்கு சாப்பாடக் கொடுத்து தூங்க வை, நான் பஜாருக்குப் போறேன்" அங்கிருக்க மனமின்றி அப்பா கிளம்பிவிட்டார்.

அம்மா விமானப் பயணத்தை விசாரித்து விட்டு, சோறு வைத்து ரசம் ஊற்றிக் கொடுத்தாள், கொஞ்சம் உப்பு அதிகமாய் இருந்தது, அவள் கண்ணீர் விட்டிருந்திருக்கக்கூடுமென எண்ணிக் கொண்டேன், வறண்ட தொண்டையை கிழித்துக் கொண்டே சென்றது பருக்கைகள். அம்மா பொறியலொன்றை வைத்துக் கொண்டே அழுது அழுது கம்மிய குரலில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள், என் காதில் எதுவுமே சரியாக விழவில்லை. தட்டிலேயே கையைக் கழுவிவிட்டு அம்மா மடியிலேயே படுத்துக் கொண்டேன். என் தலையைத் தடவி விட்டுக் கொண்டே "இந்த மனுசன் கல்நெஞ்சக் காரன், சொட்டுக் கண்ணீர் விடலியே, இந்த வீட்டக் கட்டி முடிக்க எம்புட்டுப் பாடு..." என இழுத்துக் கொண்டே இருந்தாள், நான் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாமல் தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்ததும் வெளிச்சமாய் இருந்தது, அண்ணன் வேலைக்கு கிளம்பிவிட்டிருந்தார், அண்ணி பஜாருக்குப் போயிருந்தார்கள். அம்மா காப்பியைக் கையில் வைத்துக் கொண்டு பல்தேய்க்கச் சொன்னாள். வாங்கிப் போட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, வீடு வந்தோம் நானும் அப்பாவும்.
"அம்மா, இதுல எண்பதாயிரம் பணமிருக்கு எங்க கம்பெனி ஓனர் கொடுத்தது, இந்தப் பணத்துக்காக நான் அஞ்சு வருசம் அதே கம்பெனியில வேலை பாக்கணும், இதை வச்சு வீடு கட்டுங்க, எனக்கு லீவு இல்ல, நான் சாயந்திரம் முதல் வண்டிய புடிச்சாதேன் சென்னைக்குப் போக முடியும், நானிங்க இல்லீன்னு வருத்தப் படாதீக, வேற வழியில்ல..." சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். அப்பா எதுவுமே பேசாமல் நான் அந்தப் பேருந்து நிலையம் செல்லும் வரை உட்கார்ந்த படியே பார்த்துக் கொண்டிருந்தார்.

நான்கு மாதம் கழிந்து விட்டது, புதுவீடு பால்காய்ச்ச ஊருக்கு வந்தேன். வீடு போக மீதமுள்ள இடத்தில் அங்கு நான் நட்டு வைத்த மாஞ்செடியை மறக்காமல் அப்பா நட்டு வைத்திருந்தார். கொஞ்ச தூரத்தில் புளியங்கொம்பு ஒன்றையும் நட்டு வைத்திருந்தார். அண்ணன் முகம் வாட்டமாயிருந்தது, அது அவரது குற்ற உணர்ச்சியாலும் இருந்திருக்கலாம். அவரும் அண்ணியும் பால்காய்ப்பு வேலைகளை முன் நின்று முடித்துக் கொடுத்து விட்டு தூங்கப் போய்விட்டனர். அப்பா மட்டும் வீட்டிற்குள்ளே வராமல் வெளியே இருந்து சாப்பிட்டுவிட்டு பஜாருக்குப் போய்விட்டார்.

காலையிலேயே என் இரண்டாவது பையன் எழுப்பினான்.

"அப்பா, தாத்தா செத்துட்டாராம்"

நானும் என் குடும்பமும் முழு தேர்வு விடுமுறைக்கு வந்திருந்தோம். காலையில் ஐந்து மணி இருக்கும், என் அம்மா வராந்தாவில் அப்பா படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அவர் கால் பக்கத்தில் சாய்ந்து அமர்ந்தபடியே இருந்தாள். அவர் இந்தப் புதுவீட்டின் உள்ளே ஒரு முறை கூட வந்ததே இல்லை. கொல்லைப்புறத்தில் இருக்கும் கழிவறைக்கு வீட்டைச் சுற்றிக் கொண்டு போவார், வராந்தாவின் கயிற்றுக் கட்டிலிலேயே படுத்துக் கொள்வார். என் மனைவியும், பெரிய மகனும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நடந்து சென்று என் அப்பாவின் மூச்சைப் பார்த்துவிட்டு, அது நின்று போயிருந்ததை உணர்ந்து பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டேன்.

"அப்பா, இன்னிக்கு குற்றாலம் போலாம்னு சொன்னில்ல, போறோமாப்பா?"

"வீட்டுக்குள்ள போயி அம்மாவை எழுப்பு, அப்பா இன்னொரு நாளைக்கு உன்னைக் கூட்டிட்டுப் போறேன்"

அம்மா என்னைப் பார்த்தாள்... அவளுக்கு வெறுமை சூழ்ந்துகொண்டதை என்னால் உணர முடிந்தது.

"டேய், இவரு கல்நெஞ்சக்காரனில்லடா, நெஞ்சழுத்தக்காரன், கடைசி வரைக்கும் வீட்டுக்குள்ள வரவே இல்லையே..."

எனக்கு அப்பொழுது அழத் தோன்றியது...




தேடல்கள் சில
தாண்டி வந்த
இளவெயில்த் துண்டு
புன்னகை புரிந்து
நின்றது.

அதன்
எண்ணத்திலும்
வண்ணத்திலும்
ஈர்க்கப் பட்டவனாய்
அதனைக் கைக்குள்
அடைக்க முற்பட்டேன்.

என்
இடையறிவை
இழிந்து கொண்டு
அது என்
புறங்கை மேலே
புன்னகைத்தது மீண்டும்
சுதந்திரமாய்.


வார்ப்பில் வெளியிட்டமைக்கு நன்றி


::: 32 கேள்விகள் - தொடர் பதிவு


இருப்புக்குள் மீண்ட நண்பன் ரிஷான் ஷெரீபிற்கு புதுவாழ்க்கைக்கான வாழ்த்துகளையும், எனை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கான அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு தொடங்குகிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

இயற்பெயர் பிடிக்காதவர் உண்டு, புனைபெயர் பிடிக்காதவர் உண்டா? எனது இயற்பெயரின் அர்த்தத்தினை தூய தமிழ்சொல்லால் வடமொழிக் கலப்பின்றி எழுத நினைத்து, எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஜூன் 3, 2009. அர்த்தமற்றுப் போன சம்பவங்களால் சில முறை அழுவதுண்டு, அழுததால் அர்த்தம்பெற்றுக் கொண்ட சில அழுகையுண்டு, இது இரண்டாம் வகை. என்னையும், என் தோழனையும், என் தோழியையும் பற்றி வெகுவாக அன்பு மட்டுமே கலந்த அர்த்தம் கொள்ள துணைவந்த துளிகளவை! வாழ்க!

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

வெகு சில நேரம் மட்டுமே. எனக்கான நிலையான கையெழுத்தென்பது இல்லை போலும். அவ்வப் பொழுது இருக்கும் மனநிலைக்கேற்ப கையெழுத்தும் மாறும். ஒரு நல்ல கையெழுத்தின் சொந்தக்காரரால் ஈர்க்கப் பட்டால் சில நாட்கள் அழகாகவே இருக்கும், மீத நாட்களில் கிறுக்கல்களே! என் கையெழுத்து என்பதால் பிடித்தம் கொஞ்சமுண்டு.

4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா சமைத்த மதிய உணவு வகைகள் அனைத்தும்!

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடனோ, கேட்டவுடனோ பலரைப் பிடித்து, சிலரைப் பிடிக்காமல் போனதுண்டு. பிடித்தவரை பிடிக்காதவராய் மாற்ற முடிந்தவரை விடமாட்டேன், பிடிக்காதவரை பிடித்தவராக்க எளிதில் அனுமதிப்பதுண்டு. பேச்சளவான நட்பிற்கு அதிகம் எல்லைகளை விதிக்காதவன். மனதளவு நட்பிற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறேன்.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

ஏதோ ஒரு சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியர் சொன்னதினால் என் பெற்றோர் என்னை தண்ணீர் ஆழமுள்ள, அபாயமுள்ள எந்த இடத்திற்கும் அனுமதித்ததில்லை. இருப்பினும் வாலிபம் வந்த பிறகு அருவியிலும் கடலிலும் குளித்திருக்கிறேன் பாதுகாப்பான இடத்திலிருந்து. உண்மையில் இரண்டுமே எனக்குப் பிடித்தவையல்ல... மெல்ல ஓடும் கழுத்தளவுத் தண்ணீரில் குளிப்பதே சுகமெனக்கு

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

முகம், மற்றும் உடை. அதிக ஆடம்பரமும் பகட்டும் இல்லாது இருப்பின் நம்பிக்கையோடு பேசுவேன்.

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

அவசியமான இடத்தில் உடனே மன்னிப்புக் கேட்பது, உதவுவது, நேர்மை எனக்கு என்னிடத்தில் பிடித்தவை. பிடிக்காதவையென இவற்றைச் சொல்லலாம் : என்னிடத்தில் பேச்சுத் தோழமையிலிருந்து மனசுத் தோழமைக்குக் குடிபெயர்தலின் பொழுது நான் அவர்களுக்கு விளைவிக்கும் பிரச்சினைகள், சில நேரம் என்னையறிந்தும், பல நேரம் என்னை அறியாமலும். என்னைப் புரிந்துகொண்டோர்கள், நம்பியவர்கள் இதன்பின்னும் நிலைத்திருப்பார்கள்! மற்றும், முக்கியமல்லாத அல்லது உணர்வு சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு அவ்வப்பொழுது இருக்கும் மனநிலையின் பதிலையே கூறுவது, முடிவான பதிலாக அல்லாமல்...

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விசயங்கள் என்ன?

என் பாதி என் தோழர்கள், அவர்களிடம் பிடிக்காததேயில்லை, அவர்கள் திருத்திக் கொண்டால் இன்னும் பிடித்தமாவார்களென்ற ஒரு சில விசயங்களைத் தவிர. குடும்பத்திற்கும்(ஒருவேளை திருமணம் புரிந்தால் மனைவிக்கும்) நான் பாதியைக் கொடுக்கவில்லை, என்னை முழுதுமே கொடுத்திருக்கிறேன்.

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

தோழர்கள், மற்றும் பெற்றோர். பெற்றோரைப் பிரிந்து 8 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தும் இன்னமும் அவர்களுக்குப் பிடித்தவனாய் நானிருப்பதற்குக் காரணம் என் தோழர்களே! நட்சத்திரம் பெரிதெனினும், நிலவின் வெளிச்சத்திலேயே 8 வருடங்கள் கழிப்பதால் நிலவு பெரிதெனப் படுகிறது. இவர்களைப் பிரிந்து தற்பொழுது தற்காலிகமாக ஜப்பானிலிருக்கும் நாட்கள் நரக நாட்களே!

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

கருநீல கைலி, வீட்டில் இருக்கும் போது மேல் சட்டை அநேகமாக அணிவதில்லை.

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

நிலாவே வா - மௌனராகம். எதற்காகவோ அந்தப் பாட்டிலுள்ள வலி என்னை ஆக்கிரமித்திருக்கிறது தற்பொழுதெல்லாம்...

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

வான் நீலம் மட்டும். நானாக விட்டு விலக எண்ணியும் என்னையே நாடி வந்து கொண்டிருப்பதால், விலக்கப்படாத அங்கீகாரம் அளித்திருக்கிறேன் அதற்கு.

14. பிடித்த மணம்?

மழைப் பொழுதின் மண்வாசனை, மழைநேரத்து தேநீர் வாசனை, சாணம் தெளித்த கிராமத்து பூர்வீக வீட்டு வாசனை.

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கோகுலன் - என் இணைய தோழன். பகிர்ந்துகொண்ட சொற்கள் சொச்சமே எனினும் அவனுக்கும் எனக்கும் ஒரு சின்ன புரிதல் இருக்கிறது. அவனது கவிதைகள் எனக்குப் பிடித்தம், சிறுகதை மிகப் பிடித்தம்.

சஹாராதென்றல் - என் இணைய தோழி. இதுவரை மின்மடல், மின்னரட்டையென எதிலும் பேசிராவிட்டாலும், அவளது புனைவுக் குறிப்புகளின் சுவைஞன் நான். குறிப்பெழுதுதல், கவிதை வரைதல் இரண்டிலும் கெட்டிக்காரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சமீபத்தில் வெளியான விருட்ச துரோகம். ஒவ்வொரு முறையும் இது மாறிக் கொண்டே இருக்கிறது புதிய படைப்புகள் வரும்பொழுது!!!

17. பிடித்த விளையாட்டு?

மைதானத்தில் பூப்பந்து, வீட்டிற்குள் விளையாட்டு விளையாடுவதில்லை, தோழர்களுடனான பேச்சு விளையாட்டு மட்டுமே.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், 7ம் வகுப்பிலிருந்து.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பணத்தைக் கொட்டி எடுக்கும் அர்த்தமுள்ள திரைப்படத்தின் அழகு (டைட்டானிக், டிராய், ...), ஆடம்பரமற்ற அருமையான கதை, திரைக்கதை (அன்பே சிவம், மௌனராகம், காதல் கொண்டேன்,...) அமைந்த கதை எதுவாயினும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

தமிழில் கடைசியாகப் பார்த்தது மறுபடியும் ஒருமுறை "அன்பே சிவம்". ஆங்கிலத்தில் கடைசியாகப் பார்த்தது மறுபடியும் ஒருமுறை "காஸ்ட் அவே" (cast away), என் தனிமைக்கு மருந்தாய் அந்த கதாநாயகனின் தனிமை!

21. பிடித்த பருவகாலம் எது?

மெல்லிய தூறல் பெய்யும் காலமெதுவாயினும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

மீண்டுமொரு முறை கவிக்கோ அப்துல் ரஹ்மானின் "பால்வீதி"

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

மாற்றாக எனைக் கவர்ந்த ஏதாவது கிடைக்கும் பொழுது, ஆயினும் அடிக்கடி மாற்றுவதில்லை.

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

மௌனம், மற்றும் மௌனம் இதனின் மெல்லிய உணர்வுச் சத்தம், சந்தர்ப்பங்களைப் பொறுத்து.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

டோக்கியோ, இந்தியாவிலிருந்து 9 மணி நேர விமானப் பயணம்.

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

கவிதை, ஓவியம், இதில் சிறுகதை சேர்ந்து கொள்ளும் முயற்சியில்...

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்?

நீண்ட நேர விளக்கத்திற்குப் பிறகும் எனக்கு விருப்பமானவர்கள் என்னைப் புரிந்து கொள்ளாத விசயங்கள் மற்றும் நம்பிக்கைத் துரோகம்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

கொஞ்சம் முன்கோபம், கொஞ்சம் அவசரம்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

மொட்டை மாடி அதிகாலை, அந்தி, இரவு வேளைகளில்.

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

என்னைப் புரிந்து கொண்டவர்களை மட்டுமே கொண்ட சூழலில் சில சின்ன ஊடல்களோடும், பிறகு வரும் கூடல்களோடும் வாழ ஆசை.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

இப்பொழுது செய்யும் எல்லாமேதான், ஏனெனில் எனக்கு இப்பொழுதுவரை மனைவி, காதலி இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

ஒரேயொரு முறை வாழக் கிடைத்த வாய்ப்பில் பிறரிடம் அன்பு மட்டுமே செலுத்த வேண்டிய செல்லப் பயணம்!



தனிமையின்
பேய்க்கரங்களால்
என்னைச் சூழ்ந்திருந்த
வெய்யிலில்
தவிர்க்க முடியாத
காரணங்களுக்கு
அடிமையானவனாய்
உனது கோரிக்கைகளை
நிராகரிக்கும் கோடாரிகளாக
எனது சொற்களுக்கு
வலுவூட்டிக்
கொண்டிருந்தேன்
நாம் நடந்த
ஒரு சாலையில்
நடந்து செல்லும்போது
அகலப்படுத்துதலின்
பெயரில் மரங்கள்
அகற்றப்பட்டிருந்தன
சாலைக்குப்
புரிந்திருக்கும்
என்
விலகுதலின் வலி.




தமிழ் ஆத்தர்ஸில் வெளியிட்டதற்கு நன்றி



அர்த்தங்களின்றிக் கழியும்
அந்தி நேரங்களில்
ஒரு சூனியக்காரியின்
மர பொம்மையாய்
மாறியது மனது
ஏக்கங்கள் தசைகளில்
ஏறி அதை
இறுக்கி இறுக்கி
மேலும் உணர்வுகளைப்
பலப்படுத்தியது
இரணம் இரணமாய்
வழிந்து செல்லும்
உணர்ச்சிக் கோடுகளின்
வழியே மீதமிருந்த
வெட்கமெல்லாம்
கரைந்து அழிய
தனிமையில் ஒதுங்கிய
மானின் முதல்
அலட்சியத்திற்காக
ஊடுறுவும் ஓநாயின்
கண்களோடு தசைகளைத்
துளையிட்டுத் திறக்கும்
காமம்
மழை முடிந்த பின்னும்
வழிந்து முடியாத
இலையின் தூறலாய்
அவள் கடந்த பின்னும்
தொடரும் கண்கள்.


கீற்றில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.keetru.com/literature/poems/oliyavan.php