பதிவுலகம், ஒரு சரியான மாற்றமாக நான் கருதிய இடம். 12ம் வகுப்பிற்கு பிறகு பலர் இங்கே தமிழில் எழுதுவதே இல்லை. கடிதமெழுதும் முறையும் ஈ-மெயில் தளத்திற்கு மாறிய பின்னர் தமிழ் அதிலிருந்தும் விலகிவிட்டது. என் தோழர்கள் சிலர் தன்னுடைய கையெழுத்தின் அழகே போய்விட்டது, முக்கியமாக தமிழே மறந்துவிட்டது எனக் கூறுவார்கள். உண்மைதான், கணினி தொழில் நுட்பத்திலும், இதர பல வேலைகளிலும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் செலவழிக்கும் யாரும் தனது கையெழுத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதி பார்ப்பதே இல்லை. இதை நிவர்த்தி செய்யும் ஒரு இடமாக பதிவுலகமும், இணையக் குழுமங்களும் உருவெடுத்தது மிக நல்ல மாற்றம்.
நான் சில நேரம் வியந்ததுண்டு, கவிதைகளை நேசித்து பின்னூட்டமிடும் பலர் உடனடியாக கவிதை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். முதலிலெல்லாம் வாசகர்களாகவே பலர் காலம் முழுதும் இருந்ததுண்டு. எழுதுபவருக்கு இணையாக வாசகருக்கும் ஆழ்ந்த சிந்தனை இருக்கும், கவிதை, சிறுகதை பற்றிய தேர்ந்த ஞானம் இருக்கும். இன்றோ புதுக்கவிதை என்ற பரிமானத்தாலும், பதிவுலகத்தாலும் பலரும் கவிதை, சிறுகதை எழுதி வருகிறார்கள். இது ஒரு பாராட்டத்தக்க மாற்றம்தான். அன்றாட தொழிலில் என்னதான் ஈடுபாடோடு இருந்தாலும் சலிப்பு தட்டும் நேரங்களில் மனம் வேறு ஒரு பொருளை நாடும்போது இந்த பதிவுலகம் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. அப்படியே தமிழும் தன் ஆயுளை நீட்டிக் கொண்டிருப்பதில் ஏக மகிழ்ச்சி.
எதிர்விணை என்ற ஒரு கருவியைக் கொண்டு ஒரு சில பதிவுலகர்கள் அடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் பதிவுலக விருது என்ற பெயரில் யாரேனும் ஒருவர் ஒரு விருதை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்க்கு தட்டிவிடும் பொழுது அது பன்றிக் காய்ச்சல் போல :-) பதிவுலகம் பூராவும் பரவி விடுகிறது. ஆயினும் இது ஒரு நட்புக் காய்ச்சல்! சக பதிவர்களிடம் மனமுவந்து நட்பு பாராட்டும் விதமாக இந்த விருதுகள் தரப்படுவது நல்ல முயற்சி. ஆனால் சமீபத்தில் பதிவுலகத்தில் நிலவும் மற்றொரு கருத்து விருதுகள் சலிப்புத் தட்டுகின்றன என்பதாக இருக்கிறது. எப்பொழுதுமே ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தோன்றிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும் இதுவும் சிந்திக்க வேண்டிய கருத்தாகவே இருக்கிறது. ஒரு விருதின் அலை தொடங்கி கரை வந்து முடியும் நேரத்திற்குள்ளாகவே அடுத்த விருதின் அலை தொடங்கிவிடுகிறது. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும், ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் போதிய இடைவெளி விடச்சொல்லும் அரசாங்கத்தின் அறிவுரை போல ஒரு விருதின் அலைக்கும் மற்றொரு விருதின் அலைக்கும் போதிய இடைவெளி விட்டால் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஸான் விருந்தைப் போல திகட்டாமல் இருக்கும். இல்லையேல் அன்றாட பிரியாணியும் அலுத்துப் போகும் என்ற புதுமொழி?!க்கு ஏற்றார் போல இதுவும் அலுத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.
எனக்கு இந்த Interesting Blog Award (வேற வழியில்லங்க, இப்படித்தான் ஆங்கிலத்துல இருந்துச்சு, ஒரு வேளை பல மொழி பதிவர்களுக்கும் இடையில பொதுவான நட்பு பாராட்ட ஆங்கிலத்துல தட்டச்சிருப்பாங்க போல...?!) முதன் முதலில் நட்புடன் ஜமாலிடமிருந்து வந்தது. எனது காலக்கவிஞன் என்ற கவிதையின் பின்னூட்டமாக விருதோடு அடியெடுத்து வைத்தார். இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் எனது தோழி சகாராதென்றலிடம் இருந்தும் மறுமுறை வந்திருக்கிறது. எனக்கு தெரிந்த வலைப்பதிவர்கள் பலரும் இந்த விருதை பெற்றுவிட்டதாலும், மீதமுள்ளோர் விருதை வாங்க விருப்பமில்லாமல் இருப்பதாலும், இந்த விருதை மூவருக்கு மட்டும் கொடுக்கிறேன்.
உத்ரா - என் கல்லூரி முதல் வருடத்தில் இவனது கவிதைகள் நிறைந்த டைரியை காண நேரிட்டபிறகுதான், எனக்குள்ளே ஒரு கவிதை உருவானது. நான் எழுத ஆரம்பித்த பிறகு ஒன்றிரண்டு முறை அவன் கூறிய பின்னூட்டத்திலிருந்து எனது எழுத்துக்கள் மேலும் மெருகேறியது. அவனுக்கு பின்னர் எனது பயணத்தை ஆரம்பித்திருந்தாலும், அவனுக்கு முன்னர் பதிவுலகம் வந்துவிட்டேன். நான் நேசித்து வாசிக்கும் கவிஞர்களில் இவனுக்கு எப்பொழுதுமே முதலிடம்!
இரசிகை - என் அண்ணி. பதிவுலகத்தில் கால் வைப்பதற்கு முன் பலநூறு தடவை சிந்தித்து கால் பதித்தவர்கள். எளிமையான கவிதை இவரது இலக்கணம். இரசிகையின் பார்வை எப்பொழுது வித்தியாசமும் சுவாரசியமும் நிறைந்தவை.
சுரேஷ் - இவன் ஒரு சிறந்த சிந்தனையாளன். வித்தியாசம் என்பது இவனது மந்திரம். எதிலும் வித்தியாசப்படுவது அல்லது அதை வித்தியாசப்படுத்துவது இவனது தந்திரம். எழுத்துலகிலும் இவனது ஒரு சில படைப்புகள் அந்த வித்தியாசத்தை காண்பித்திருக்கிறது. "குறுஞ்செய்தி வாயிலாக ஒரு கதை" என்ற இவனது படைப்பு எனக்கு மிகப் பிடித்தம்.
பின்தொடர...
இனங்காட்டி
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
இனங்காட்டி
கவிதை,
வலி
பின்னூட்டங்கள்(u can write ur comments here) (6)
பெரும் வெளியில்
பேய்க்காற்றின்
கரங்களால்
எறியப்பட்ட
மேகங்கள்
ஒன்றுடன் ஒன்று
புணர்ந்து கொண்டிருந்தது
வெட்கங்கெட்டுப் போய்
சத்தமிட்டவாறே
அவை சேர்ந்து
திரிகையில்
காமக் குரோதம் கொண்ட
ஒளிக்கீற்று ஒன்று
உலகிலோர் உயிர்
உறிஞ்சிப் போனது
காமப்பசி
அடங்கிப்போனதற்கு
அறிகுறியென
சுக்கிலமாய் வழிந்தது
மழைத் துளிகள்
அதில் எந்தத்
துளியும் கழுவிடவில்லை
அப்பிஞ்சை சுமந்த
காம்பின் கண்ணீரை.
பி.கு: மே 20, 2009 அன்று கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு 9ம்
வகுப்பு மாணவன் உயிரை பலி வாங்கியது மின்னல். அன்று எழுதியது.
Subscribe to:
Posts (Atom)