பல புள்ளி விபரங்கள் காட்டும் எண்ணிக்கை இந்தியாவில் 81.3% இந்துக்களும், 12% முஸ்லீம்களும், மீதம் ஏனையோர்களும் இருப்பதாக கூறுகிறது. பல இணைய குழுமங்கள் முதல் அன்றாட பத்திரிகை வரை பலரால் விமர்சிக்கப்பட்ட மதம் இந்து மதமாகத்தான் இருக்கக் கூடும். காரணமும் இருக்கத்தான் செய்கிறது. இப்பேர்பட்ட விமர்சனங்களின் அச்சாணியாக இருப்பது சாதிய முறை என்ற ஒன்றே. சாதியின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டவர்கள் பலர் மதம் மாறினர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க, என்னுடைய பார்வையில் இந்து மதம் எனப்படுவது யாது அது எப்படி இருக்கிறது என்பதை பதிய விரும்புகிறேன்.
இந்து என்பது முதற்கண் ஒரு மதம் அல்ல, அது ஒரு நெறிமுறை, தத்துவம், கோட்பாடு. மற்ற பெரிய இரு மதங்களில் மதத்திற்கொரு புத்தகமென்று வைத்துக்கொண்டு அதை அந்த மதக்காரர்கள் தவறாமல் வாசித்து விடுகிறார்கள். ஆனால் இந்துக்களோ பலர் வேதங்களை வாசிப்பதில்லை. சில மதத்திலிருக்கும்; தன்னை மனிதாபிமானிகள் எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் இந்து சமுதாயத்தைக் கேலி செய்வதுண்டு. இவர்களுக்கு தெரியாதா அல்லது தெரிய மறுக்கிறார்களா எனத் தெரியவில்லை. இருப்பினும் சிலவற்றை கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியா என்னும் நாட்டில் மொழிகள் ஆங்கிலம், ஹீப்ரு, உருது, அரபு போன்ற ஒற்றை மொழி மட்டுமே இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணம். 2000 வருடங்களுக்கும் முன்னர் எழுதப்பட்ட, அதுவும் தமிழில் எழுதப்பட்ட திருக்குறளே இப்பொழுது பலருக்கும் புரிவதில்லை. காரணம் என்ன? காலம் தொட்டு மொழியாளுமையும், பயன்படுத்தும் சொற்களும் மாறி வருகிறது. இதனால் காலம்தொட்டு எழுதப்பட்ட ஏனைய பதிவுகள் இன்றைய தேதிக்கு அர்த்தம் கொள்ளக் கடினமானதாக இருக்கிறது. அதே போல வேதங்கள் இறை அருள் பெற்ற வேத ரிஷிகளால் அவர்களால் பேசப்பட்ட மொழியில் அந்தக் காலத்தில் எழுதப்பட்டது. இருப்பினும் வேதத்தை உணர்வது என்பது அத்தனை எளிதல்ல, அதற்கு ஒரு ஞானம் தேவைப்படுகிறது. இதை பாமரனும் உணர்ந்துகொள்ளும் விதம் சொல்லுவதற்கே ஏனைய ஏடுகள் உள்ளன. கீதை, மஹாபாரதம், இராமாயணம் போன்ற பதிவுகளில் இந்து மதக் கோட்பாட்டை தெள்ளிய முறையில் எழுதியிருக்கிறார்கள். அது என்ன வேதம்? பாமரர்களுக்குப் புரியாமல் என்றும் பலர் கேட்கக் கூடும். இந்து என்ற நெறியில் இந்து என்ற நெறியைக் காக்கும் சங்கம் என்றோ, இந்த மதத்திற்கு இவர்கள்தான் குருமார்கள் என்றோ என்றும் நியமிக்கப் பட்டதில்லை, ஏனெனில் இந்து என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை, அதை இந்தியத் திருநாட்டில் இருந்த அனைவரும் பயன்படுத்தி வாழ்ந்தனர். இந்து என்ற அமைப்பில் சுதந்திரம் என்பது வெகுவாகப் பாராட்டப் பட்டது. இந்து என்ற ஒன்றை ஒரு அலுவலகம் போலவோ, அரசு போலவோ மாற்றும் எண்ணம் எங்கேயும் தோன்றவில்லை, அதாவது இந்து எனப்படுபவன் யாரெனின், அவன் நான்கு வேதங்களையும் கற்க வேண்டும் என்றோ அல்லது இந்தக் கோவிலுக்கு வாராவாரம் அல்லது தினமும் செல்லுதல் வேண்டுமென்றோ யாரும் விதிமுறை இட்டதில்லை. இந்து மனிதனை தன் சொந்த மூளையின் திறனிலேயே இயங்கவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்து சமுதாயத்தில் பிறந்த ஒருவன் வேதங்களைக் கற்க ஆங்காங்கே பாடசாலைகள் அன்று இருந்தன, அதில் கற்று ஞானம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு உபதேசிப்பதுண்டு. ஆயினும் ஆடு மாடு மேய்ப்பவர்களும், கழனியில் தினக் கூலி பார்ப்பவர்களுக்கும் அத்தகைய வேத நூல்கள் தேவைப்பட்டதில்லை, அதற்கு பதில் பூஜை புனஸ்காரம் என்று தெருவிற்கு ஒரு கோவில் வைத்து அதன் வழியே வாழ்க்கைக்குத் தேவையான நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டதே போதுமானதாக இருக்கிறது. இப்பொழுது இருக்கும் பல மதத்திற்கும் வெகு முந்தியது இந்து என்பதாலும் பல ஆயிரம் வருடங்களாக மாபெரும் நிலப் பரப்பில் அது பரவிக் கிடப்பதினாலும், ஒற்றைக் குடையின் கீழ் அதை யாரும் நிலைநிறுத்தவில்லை, மாறாக இருப்பது அப்படியே என்ற தத்துவத்தின் பேரில் அது வளர்ந்திருக்கிறது.
ஆயினும் மனிதர்களின் மனம் நாமறியாததல்ல, பல அரசர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தனக்கான மக்களை தன் நிழலில் வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். ஆயினும் உலகின் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இறையான்மையோடும் அன்போடும் வாழ்ந்த பல அரசர்கள் தோன்றிய புண்ணிய பூமி இந்த இந்து பூமி என்பதையும் மறந்துவிடக் கூடாது. காலப் போக்கில் உலகின் மற்ற மூலைகளில் அப்பொழுதுதான் மதம் முளைவிடத் தொடங்கியிருந்த காலத்தில் இந்து மதம் பழுத்த மரமாகிவிட்டிருந்தது, அதனால் கல்லடிகளும் படத் தொடங்கியிருந்தது. சமயம், சாதி என்னும் முறைகள் ஆரம்ப இந்து காலத்தில் வெறி இல்லாமல் மட்டுமே இயங்கியிருக்கிறது. ஒரு தொழில் மேம்பட செய்யப்பட வேண்டுமாயின், அந்தத் தொழில் தலைமுறை தலைமுறையாக வளர்க்கப் பட வேண்டும். சிலை செய்வது எல்லோராலும் முடியாத காரியம், அதற்கு தேர்ந்த ஞானம் தேவைப்படுகிறது, அதே போல் ஆடு மாடு மேய்த்தல். இது போல சமுதாயத்திற்கு தேவையான பல தொழில்களை, குறிப்பிட்டவர்கள் என்று அன்றி சிலர் செய்ய ஆரம்பித்து பின்னர் அதுவே பரம்பரை பரம்பரையாக தொடரப் பட்டிருக்கிறது. அதுவே பின்னர் அவர்களுக்கு அடையாளமாகிப் போக, அதே சமயங்கள், சடங்குகள், அந்தந்த சமயத்தின் குருமார்கள் என வலுப்பெற ஆரம்பித்த சமயம் சாதிய முறைகளுக்கு நடுவே வெறி புகுத்தப் பட்டிருக்கிறது.
ஒரு சிறிய நகரத்தில் ஒருவரால் தோற்றுவிக்கப் பட்ட மதம் போல் இந்து முறை வளராமல், அது பரந்த இந்து பூமியில் பல்வேறு மக்களாலாலும் வளர்க்கப் பட்டதால் அதற்கென்று அடையாளப் புத்தகம், இன்ன இன்னதைப் பின்பற்றவில்லையென்றால் நீ கேள்வி கேட்கப் படுவாய் தண்டிக்கப் படுவாய் என்று ஒரு மத குருமார்களின் சங்கமும் அன்றில்லாமல் போனது. இதனால் மட்டுமே சாதிய முறைகள் புகுந்த பொழுது அதைத் தடுக்கவியலாமல் போனது. மனிதர்கள் காட்டுவிலங்கிலிருந்து மனிதனாய் பிரிந்து நன்னெறியோடு வாழ ஆரம்பித்த காலத்தில் தனக்கான வழிமுறைகளை பண்பாடு என்னும் முறையில் வளர்த்த ஆதிகாலத்தில் இந்து என்ற ஒரு சமுதாயம் உருவாகியிருக்கிறது. ஆனால் இன்றைய அளவில் சிவன், விஷ்ணு, பிரம்மா, ஆதிபராசக்தி போன்ற உருவங்களை மட்டுமே வைத்து இந்துக்களில் பலரும், மற்ற மதத்தவர்களும் இந்து என்ற சமுதாயத்தை நோக்குகிறார்கள். இது அடிப்படைத் தவறாகும். நான் இந்துவாக இருந்து கொண்டே மேற்சொன்ன கடவுளர்களை வழிபாடாமலும் இருத்தல் சாத்தியம். ஆனால் இந்த சுதந்திரம் மற்ற மதத்தில் இருந்ததில்லை, காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும், இந்து என்பது புத்தர், நபிகள், இயேசு போன்றோரால் நிறுவப்படாத ஒன்று, அது ஒரு விதை விருட்சமானது போல மெல்ல மெல்ல வளர்ந்தது. ஏடுகளும் தாள்களும் இல்லாத காலத்திலிருந்தே வளர்ந்து வருவது. பல ஆதார ஏடுகள் காலப் போக்கில் அழிந்து போனதும் கூட. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த சமுதாயம் ஒவ்வொரு கதைகளை புனைந்துவிட்டு புராணத்தோடு அதைச் செருகியதும் நடந்திருக்கிறது என்பதும் கண்கூடாக தெரிகிறது. பல புராணக் கதைகளில் சாமானிய மனிதனின் பார்வையில் படும் குடும்ப முறைகளும், அங்கே ஒரு பாமரனின் அறிவில் தோன்றும் பிரச்சினைகளும் அதற்கான் தீர்வுகளும் இருப்பதே அதற்கு சாட்சி. இருப்பினும் குழந்தைகளுக்குப் போதிக்கப்படும் நீதிக்கதைகள் போலானவை என அவைகளை எடுத்துக் கொள்ளலாம். பல நீதிக்கதைகள் பிசகுள்ளவைதான், இருப்பினும் நீதியை மட்டும் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
அரசர்கள், இவர்களின் பங்கு மிகப் பெரியது. சாமானிய மக்களுக்கு அரசனே தெய்வம். அதாவது அரசனெனப்படுபவன் வேத சாஸ்திரங்களைப் படித்து, இருப்பினும் அந்த சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்கும் மற்றும் தகுந்த நேரத்தில் தகுந்த அறிவைப் புகட்டும் குருமார்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு மக்களைக் காத்தவர்கள். அவன் மூலமாகவே கல்வி, அதாவது கல்வி என்பது இந்து என்ற சமுதாய அறிவையும் சேர்த்து, எல்லாவற்றையும் பெற்றனர். ஒரு அரசன் இங்கனம் நடத்தல் வேண்டும் என்ற கோட்பாடுகள் இருந்தன, அவன் மக்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று இருந்தன. காலம் போகப்போக அரசர்களும் சுயநலக் கிருமிகளாக மாறத்தொடங்கினர். அதன் விளைவே பாமரர்களின் பார்வையிலிருந்து அறிவு மறைக்கப் பட்டதும், ஒடுக்கப்பட்டதும். அந்த நேரத்தில் அரசனுக்கு சமமான பண அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. ஆகவே மக்களும் முறையாக இந்து சமுயதாயத்தில் குறிப்பிடப்பட்டவையைத்தான் வழிதொடருகிறோமா இல்லையா என்றும் தெரியாமல் அந்த அந்த ஊர் கோவில்களே கதியென்றும், பின்னர் புகுத்தப்பட்ட சமயமே கதியென்றும் திரிந்து போயினர்.
பிற எந்த மதங்களும் இல்லாத காலம்தொட்டே இருந்து வரும் இந்து சமுதாயத்தில் இடையில் பரப்பப்பட்ட மற்ற மதங்களால் இந்து கேள்வி கேட்கப் படுவது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் இவர்கள் இந்து என்ற ஒன்றை ஆராயாதவர்கள், இந்து என்ற அமைப்பு ஆயிரம் அடி உயரம் என்றால், இவர்கள் தன் ஆறடி உயரத்தின் சமதளத்தில் சாதிய முறைகள் புகுத்தப் பட்ட தற்காலத்து இந்து மதத்தை வைத்து இந்து சமுதாயத்தைக் கேலி பேசுகிறார்கள். இவர்களைக் குற்றம் கூறியும் ஒன்றுமில்லை, ஏனெனில் இந்து மதத்தில் இருப்போர்களில் பலருக்கே இந்து சமுதாயம் பற்றிய ஞானம் இல்லாதது வருந்தத்தக்கது. இருப்பினும் ஒரு மதத்தின் ஆணி வேரையே புரிந்து கொள்ளாமலும் ஒரு சமுதாயம் வாழக் கூடிய அளவிற்கான அதிகபட்ச சுதந்திரம் உள்ள சமுதாயம் இந்து என்பதில் நான் மகிழ்கிறேன். இந்து முறையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களும் இந்துவிலிருந்தே வந்தவர்களென்பதாலும், அத்தகைய சுதந்திரத்தைக் கூட ஒருவனுக்கு இந்து சமுதாயம் வழங்குகிறது. இந்தியாவிலேயே காதல் கலப்பு திருமணங்கள் அதிகம் ஏற்படுவதும் இந்து சமுதாயத்தில்தான் நடக்கிறது. ஆக வெகு விரைவில் இந்த சாதிய முறைகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது. அதேபோல் பல இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் என சொல்லப்படும்போது எப்படி உண்மையை உணர்ந்த முஸ்லீம் வருத்தப்படுகிறானோ அதே போல இந்து சமுதாயம் என்றதும் சாதிக் கூத்துகளைப் பேசி, சாதி என்ற ஒன்றில்தான் இந்து சமுதாயமே இருக்கிறது என்று பலர் கூறும்போதும் ஒரு உண்மையான இந்து வருத்தப்படுகிறான். எப்படி அந்தத் தீவிரவாதிகள் மதத்தின் பேரைச் சொல்லிச் செய்தாலும் அறியாமையில் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களோ அதே போல இந்த இந்து சமுதாயத்தில் சாதிய வெறி முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவர்களும் மதத்தின் மீதுள்ள அறியாமையில் செய்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சாதி என்பது மதத்திற்குள்ளானதே அல்ல. அது சமுதாயத்திற்குள்ளானது, அதாவது இந்து சமுதாயத்திற்கு உள்ளானது எனக் கூறவில்லை, மக்கள் வாழும் சராசரி சமுதாயத்திற்குள்ளானது. இன்றும் பல தமிழகக் கிருத்துவர்கள், சாதி பார்த்துத்தான் பெண் கொடுத்து எடுக்கின்றனர், என்பதும் நான் கண்கூடாக கண்டறிந்தது. ஆக இவர்களுக்கு கடவுள் எதுவானாலும் சாதி என்பதில் நிலையாக இருக்கிறார்கள். ஆகவேதான் கூறுகிறேன் சாதி என்பது இந்து மதத்திலுள்ளது அல்ல, அது மக்களின் வாழ்க்கையைச் சார்ந்தது. இந்து சமுதாயம் ஒரு போதும் சாதிக் கொடுமைகளை அதன் கோட்பாடுகளில் ஆதரிப்பதில்லை, மற்றபடி இன்ன பிறக்கள் புகுத்தப்பட்டவையே! விவேகானந்தருக்கு அடுத்து யாருமே இந்து என்ற சமுதாயத்தை சரியான தொனியில் உச்சரித்ததில்லையோ என்றே எனக்கு தோன்றுகின்றது!