ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது



இவையெல்லாம் எனக்கு தோன்றும் சில கருத்துக்கள். பொதுவாகவே ஆண் முரட்டு சுபாவம் கொண்டவன். எப்படி ஒரு தீக்குச்சி விளக்கெரிக்கவும் வீடெரிக்கவும் பயன்படுகிறதோ அதே போல்தான் ஒரு ஆணின் கோபமும் இருக்கிறது. என்னுடன் பழகிய, அல்லது நான் பழகிய பல நபர்களில் பல ஆண்கள் தத்தம் தங்கைகளை, அக்காக்களை யாராவது கேலி செய்தாலோ, ஈவ் டீஸிங் செய்தாலோ தயங்காமல் அடிதடியில் இறங்கிவிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆக தன்வீடு என்று வரும்போது ஒரு கோபம் சமுதாயத்தைச் சூறையாடும் அளவிற்கு ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி இருப்பவர்கள் 100% பெண்களைக் கேலி கிண்டல் செய்யாமல், அவர்களை துஷ்பிரயோகம் செய்யாதவர்களா எனக் கேட்டீர்களானால் இல்லையென்றுதான் சொல்லுவேன். ஏனெனில் அவர்களே சில பெண்களை சைட் அடிப்பதும், அளவுக்கு மீறி அவதூறான சொற்களால் கிண்டலடிப்பதும் (அப்பெண்களின் காதில் படாதவாறு) உண்டு. எனது பள்ளிப்படிப்பின் பொழுது நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தின் பொழுது தன் வீட்டில் நடக்கும் பொழுது கோபப்பட்டவன் இன்றைக்கு அடுத்த பெண்ணை கிண்டல் செய்கிறானே என்று எனக்குத் தோன்றினதாலும் ஒரு மான உணர்வு ஏற்பட்டதாலும் இதுவரை நான் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை தவறான எண்ணத்தில். இதை நான் என் நண்பர்களிடமும் வலியுறித்திக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னால் எத்தனை பேர் திருந்துவது? எத்தனை பேர் பெண்ணுக்கு மரியாதை செலுத்த ஆரம்பிப்பது? ஆனால் ஒன்று நிச்சயம், எனக்கு இந்த குணம் முக்கால்பாகம் என் அப்பாவிடமிருந்து வந்ததுதான். என் அப்பா பெண்களுக்கு ஏக மரியாதை கொடுப்பவர், தாய், மனைவி இருவரையும் கண்கலங்க வைப்பவன் நல்ல மனிதனே இல்லையென்பார். நானும் அப்படியே வளர்ந்துவிட்டேன்.

ஒரு தந்தை தனது மகளை கொஞ்சம் அடக்கத்தோடு இரு, இல்லையெனில் உனக்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார் என்றால், ஒருவேளை அவருக்கும் ஒரு மகன் இருப்பானென்றால், அடுத்த கட்ட நடவடிக்கையாக தன் மகனிடம் "மகனே, உன் தங்கைக்கு சில நாய்களால் ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை நீ இன்னொரு பெண்ணுக்கு இழைத்துவிடாதே" என நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல சொல்லுதல் அவசியம். ஊரிலுள்ள பல பெற்றோர்கள் ஆணதிக்கத்தையே விரும்புவதாலும், தன் மகனின் போக்கில் அலட்சியம் காட்டுவதாலும், அவனை நல்வழிப் படுத்த முடியாமல் தோற்றவர்களுமேதான் தத்தம் பெண்களையும் வருங்கால சந்ததியையும் பெண்ணடிமை கொண்டு அழித்தவர்கள். ஒரு தந்தை தன் மகளைக் கிண்டல் செய்த ஒரு பொறுக்கியைத் திட்டித் தீர்த்துவிட்டு வீடு திரும்புகையில் தன் பையனை எவனோ ஒருவன் இப்படித் திட்டித் தீர்ப்பான் என்ற சொரணை வர வேண்டும், அந்தப் பையனுக்கோ இன்னொருவனின் தங்கை அல்லது அக்காள் இப்படி அவதிப் படுவாளோ நம்மாலென்ற எண்ணம் வர வேண்டும். ஆக இது ஆணிவேரிலிருந்து அழிக்கப் பட வேண்டுமாயின் குடும்ப அமைப்புகளிலே இது ஆரம்பிக்கப் படவேண்டும்.

ஒரு பெண்ணைக் கேலி செய்யும் ஆண் வானத்திலிருந்து குதித்து விடவில்லை, அவனும் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாகி, உருவாகி, பிறந்து, வளர்ந்துதான் வருகிறான். ஆக பெண்ணடிமையை எதிர்த்து, பெண் உணர்வு அழிப்பை எதிர்த்து, பெண் உடல் சிதைப்பை எதிர்த்து குரல் கொடுக்கும் இன்றையை பெண்களே முதலில் கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே ஒரு முறை பார்த்து கேள்வி கேளுங்கள் "நாம் நம் மகனை பெண்களை மதிப்பவனாக, பெண்களின் சம உரிமையை போதிப்பவனாக வளர்த்திருக்கிறோமா?" என்று. உங்கள் பதில் இல்லையென்று இருப்பதானால் நீங்கள் உங்களுக்காக வெட்கப்பட்டுக்கொண்டு, மறுமுறை சம உரிமை பற்றிப் பேசாதீர்கள், அல்லது உங்கள் மகனை திருத்திவிட்டு பிறகு சம உரிமை பற்றிப் பேசுங்கள். சின்ன வயதிலிருந்தே தன் மகனை வாராவாரம் கோவிலுக்குக் கூட்டிச் சென்று, இறைவனையும், பக்தியையும் போதிக்கும் பெண்ணினமே முதலில் உன் மகனுக்கும் மகளுக்கும் பெண்ணுரிமையின் தாகத்தை, அதன் அவசியத்தை விளங்கவை, பெண் அன்பை போதிக்கும் முதல் கடவுள் என்பதை புரிந்து கொள்ள வை. குழந்தையை அபாக்கஸில் சேர்த்து படிப்பை போதிக்கும் பொழுதே அக் குழந்தையை சமூகத்தினில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று பழக்கு, முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் (அதாவது மேலை நாட்டில் ஒரு பழக்கமுண்டு good touch, bad touch என்று, ஒரு குழந்தையின் மர்ம பாகத்தை தாய் தொட்டுக் காண்பித்து இது bad touch என்றும், கை போன்ற இடங்களைத் தொட்டுக் காண்பித்து good touch எனவும் சொல்லித் தருவாள். ஒவ்வொரு முறை பள்ளி முடித்து குழந்தை திரும்பியதும் யாராவது bad touch செய்தார்களா என அறிந்து கொள்ள இது உதவும்) போன்றவற்றை சொல்லித் தருவதால் பெண் குழந்தை அறியாமையில் எங்கும் வீழ்ந்திடாது பாதுகாக்கப் படுகிறது. இதுதான் ஆக சிறந்த வழி, ஒரு சமுதாயம் நிரந்தரமாய்த் திருந்தவேண்டுமெனில் குடும்ப அமைப்பே முதலில் திருந்த வேண்டும். ஆனால் இதற்கு காலம் பிடிக்கும். எத்தனை காலம் பிடிக்கும்? ஐந்து வருடத்திற்கு முன்னர் பிறந்த குழந்தையிலிருந்து இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகள் தத்தம் காளையர் வயதை அடையும்போது ஒரு திருந்திய சமுதாயத்தை நாம் உருவாக்கி விட்டிருப்போம். அதாவது அதிக பட்சம் 16 முதல் 20 ஆண்டுகள். பல காலமாக வரும் பெண்ணடிமை யுகத்தில் இந்த ஆண்டுகள் சொற்பமே என்று எண்ணுதல் வேண்டும். ஆயினும் இத்தனை ஆண்டுகளில் நாம் ஒரு திருந்திய சமுதாயத்தை ஏற்படுத்தியிருப்போம் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

மேலும் இன்றைய உலகில், பல பெண்கள் குறைந்தது 12ம் வகுப்பு வரையாவது படிக்கிறார்கள். ஆக அவர்களுக்கு ஏற்பறிவாவது இருக்கும். தன் குழந்தைகளை வளர்க்கும்போது எப்படிப் பட்டவனாக வளர்க்க வேண்டுமென்று அவளுக்கு புரியும் அல்லது நாம் புரியவைத்தல் வேண்டும். இது ஒரு பதினாறாண்டுகால திட்டம். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுமுனையில் சில ஓராண்டு திட்டம் முதல் ஐந்தாண்டு திட்டங்கள் வரை ஆரம்பிக்கப் படவேண்டும். அதாவது இன்றைய தனியார் அலுவலகங்களில் குறைந்தது 100 பெண்கள் வேலை பார்க்குமிடத்திற்கு அரசாங்க பரிந்துரை வேண்டுமானால் அதற்கு பெண்களுக்கு கவுன்சலிங், குறைகேட்கும் வசதி செய்யப் பட்டிருக்கவேண்டும் என்ற அரசாணை போன்றது. இது போல பல அரசாணைகள் சுகாதாரம் போன்றவைகளுக்கு இருந்தாலும், அவையெல்லாம் ஒழுங்கான முறையில் நடப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், 100ல் ஒரு நிறுவனமாவது இதை ஒழுங்காக கடை பிடித்தாலும் நமக்கு நன்மைதானே! இப்படிப்பட்ட பெண்கள் குறை தீர்ப்பு மையம் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் அதை எதிர்த்து ஸ்ட்ரைக் போன்ற போராட்டங்களை முன்னிருத்தி நடத்த அகில இந்திய பெண்கள் குறை தீர்ப்பு மைய சங்கம் ஒன்று நிறுவப் பட வேண்டும் (இந்திய மாணவர்கள் படை என்பது போல, செயல் சுத்தமானதா என விவாதிக்க இது நேரமில்லை, அங்கேயும் ஓட்டைகளென்பதும், கையூட்டுகள் என்பதும் இருக்கத்தான் செய்யும், ஆயினும் எங்கே தன் வாசலில் கொடி பிடிப்பார்களோ என்ற அச்சமும் நிறுவனத்திற்கு கொஞ்சம் இருக்கும்). முக்கியமாக இந்த துறையைச் சார்ந்தவர்களில் ஒரு ஆண்களும் இருத்தல் கூடாது, அனைத்து பதவியிடங்களும் பெண்களாலேயே நிரப்பப் படவேண்டும். என்னிடம் யோசனை கேட்டால் ஒவ்வொரு பெரிய நிறுவனமும் எப்படி செக்யூரிட்டி வேலைக்கு பல தனியார் நிறுவனங்களை சார்ந்து அங்கிருந்து பணியாட்களை எடுத்துக் கொள்கிறதோ அதே போல சமூக நல வாரியங்களான லயன்ஸ் க்ளப் போன்ற இடங்களிலிருந்து முழுக்க முழுக்க ஆண்களின் பார்வைக்கு கீழே வராத ஒரு பெண்கள் சார்ந்த மையத்திலிருந்து ஆட்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஓய்வு பெற்ற சிறந்த பெண் நீதிபதியை இந்த அகில இந்திய பெண்கள் குறை தீர்ப்பு மையத்தின் தலைமையாக நியமிக்கலாம். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இந்தத் தலைமை மாற்றப்படவேண்டும், ஒரு குடியரசுத் தலைவர் எப்படி நியமிக்கப் படுகிறாரோ அதே போல (இதை வாசித்த பொழுது சிலர் சிரித்திருக்கக்கூடும், குடியரசுத் தலைவரின் சக்தி பற்றி இந்தியா அறியாததா என, இருப்பினும் அப்படி ஒருவராவது நமக்கு இருத்தல் அவசியம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்).

இந்த பதினாறாண்டுகால திட்டத்தின் முதல் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், எப்படி செயலாற்றுவது என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். என் பங்கிற்கு ஒரு வழி நான் சொல்லுகிறேன். ஒவ்வொரு வருடமும் அரசாங்க பெண்கள் சம உரிமை நாள் ஒன்றை ஏற்படுத்தி, அதாவது ஜனவரி மாதத்தின் முதல் வேலைநாள் போன்ற நாட்களைத் தேர்ந்தெடுத்து, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரிகள் இவையனைத்திலும் பெண்களின் சம உரிமையைப் பற்றி வகுப்புகள் எடுக்கப் படவேண்டும். அன்றைய தினத்தில் மாணாக்கர்களுக்கு விடுமுறையை அளிக்காமல், அரங்கத்தில் வைத்து அவர்களுக்கு நான் மேலே கூறிய கருத்துக்களை நாம் கற்பித்தல் வேண்டும். மீதத்தை நீங்கள் சிந்தித்து சொல்லுங்கள்.

3 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

தமிழிஷின் பிரபல இடுகளைகள் பட்டியலில் வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.

அப்படியே இதையொட்டிய தங்கள் கருத்துக்களையும் எழுதினீர்களென்றால் நலம் பெறும். நான் எண்ணிய கருமம் நல்வழியில் செல்லும்.

சிறப்பான கட்டுரை ஒளியவன்.தமிலிஷில் ஓட்டும் போட்டுவிட்டேன்.

உங்கள் கட்டுரையை காணும்போது வருங்கால பாரதத்தை பற்றிய நம்பிக்கை அதிகரிக்கிறது.நன்றி

-செல்வன்

மிக்க நன்றி அண்ணா. சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்... இப்படி பெண்ணுரிமை பற்றி பேசி என்னப் பண்ணப் போற, கொஞ்ச நேரத்துல நீ உன் வேலையையும் நான் என் வேலையையும் பார்க்கப் போறோம்னு... ஆனால் இவர்கள் கை மேல் உடனடி பலனுண்டு என்று சொன்னால்தான் எதையும் செய்ய துணிபவர்கள். நான் பேசியது இதுநாள் வரை புண்ணியமானதாவென தெரியாது. இன்று ஒருவர் இக்கட்டுரையைப் பார்த்து தான் திருந்தியதாய் கூறியது பெரிய மன மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது. நன்றி அண்ணா. நானும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன் இனி.