கூடு பிரித்து வெளியேறுகிறாய்
ஒரு
வசந்தகாலத்தில்
அழைப்புகள்
ஏதுமின்றி
எனது எண்ணக்
கிளைகளின்
காதல் இலைகளினூடே
கூடுகட்டி வசித்தாய்
உன் கூட்டிற்கு
என்னிடமிருந்தே
சுள்ளிகள் கொடுத்தேன்
நான் இலைகளற்று
வெறுமையில்
தவிக்கிறேன்
இலையுதிர்காலத்தில்
இப்பொழுது ஏனோ
பிரிந்து செல்கிறாய்
ஒருமுனைக் காதல்
எனக்குள்
நிறைந்து வழியும்
உன்னை
கண்ணில் ஊற்றியவளாய்
புன்னகைத்தேன்.
என்னைப்
பற்றிய எவ்வித
பிரக்ஞையுமின்றி
கண்களைத் திருப்பிக்கொண்டாய்
உடைந்து விழுந்தது
ஏற்றுக்கொள்ளப் படாத
என்னிதயத் துண்டுகள்
நமக்கு நடுவிலே.
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
1.
யாருமற்ற தனிமையில்
விடுபடாது இருந்தது
உன் நினைவு.
உனது கடந்தகால
நினைவுகள்
எனது நிகழ்காலத்தை
உறிஞ்சிக் கொண்டிருந்தது.
சூல் கொண்ட
பூவாய் நான்!
தேன் குடித்து விட்டுப்
பறந்த வண்டாய் நீ!
2.
என் ஏகாந்த
தனிமையில் சுழல்கின்ற
நொடி'முள்ளாய்' நீ.
என் இரவிற்கு
வெள்ளையடித்துவிட்டு
போனது உனது வார்த்தை
மின்னல்கள்.
மின்னல் கிழித்துப்போன
மேக ஓட்டையில்
கண்ணீர் கசிகிறது
மாமழையாய்.
3.
கல்லறை தூரமானது,
கருவறையில்
உன் பிரதி.
துரோகச் சிலுவையில்
என்னை அறைந்துவிட்டு
மூன்றாம் மாதம்
உயிர்த்தெழுந்திருக்கிறாய்.
முற்றுப் புள்ளி
எட்டாத எனக்கு
கேள்விக்குறியாய் உன்
நினைவு முட்கள்.
அதிகாலையில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14131&lang=ta&Itemid=164
சொத சொதவென
இரத்தச் சகதியில்
நீ
இறுதி மூச்சை
இறுக்கிப் பிடித்தபடி
போகிறாய்.
உன்னைக் கரைசேர்க்கவல்ல
உதவிக் கரங்கள்
உலக சந்தையில்
விற்பனையாகிவிட்டன.
உன்னைப்
பின் தொடர்கிறது
பிணந்தின்னிக் கழுகு.
உன்
மரணச் செய்தி
பணம் காய்க்கும்
வித்தை அவர்களுக்கு.
நீ
நிம்மதியாக உறங்கு
உன்
மரணமும்
உதவுகிறது.
சொச்ச தூரத்தில் ஒரு
சொர்க்கம்,
மொட்டை மாடி.
நாகரீகங்களும்,
வளர்ந்த கட்டிடங்களும்
அர்த்தமற்றுப் போகும் இடம்.
வான் கடல்
இறைத்து விட்டுப் போன
கிளிஞ்சல்களாய் மேகங்கள்,
அவற்றில் வண்ணம் தூவி
ஹோலி கொண்டாடும்
அந்தி நேரச் சூரியன்,
இந்தப் பரவசத்தில்
நாளும் புல்லரித்துப்போகும்
பூமியின் ரோமங்களாய்
மரங்கள்,
திசையெங்கும் அளந்து முடித்து
கூடு திரும்பும் பறவைகள்,
ஆடைக்குள் புகுந்து
அக்குளில் கூச்சம்
காட்டும் பிஞ்சு விரல்களாய்
அந்திநேரத் தென்றல்,
இத்தோடு சேர்ந்து கொண்டு
சத்தம் என்னும்
சட்டை கழற்றி எறிந்து
மௌனம் உடுத்தி
அம்மணமானது ஒலி.
அந்த நிசப்த
நேரத்தில் போதி மரங்களை
தேடியலையும் எண்ணங்கள்,
பாவ மன்னிப்புக்காக
பாதரியாரைத் தேடியலையும்
பாவ சிந்தனைகள்.
வண்ணம் தூவி
விளையாடி முடித்த
கதிரவன் வீடு திரும்ப,
இருட்டுக் கம்பளத்தைப்
போர்த்திக் கொள்ளும்
வானம்.
இருண்ட பிறகு
திண்ணைப் பேச்சுக்குக்
கூடும் கிராமத்துக்
கன்னிப் பெண்களாய்
விண்மீன்கள் கூட்டமிடும்.
இதில் லயித்துக் கொண்டே
எண்ணக் கால்கள்
தரையை விடுத்து
தாவியெழும் விண்ணுக்கு....
கானம் பாடத் தெரிந்து
கூடு கட்டத் தெரியாத
குயிலாய் மாறத் தூண்டும்
ஆசையைத் துறக்கச்
சொல்லும் ஓர்
அந்தரங்க நரம்பு,
அந்த எண்ணங்களின்
கால்களை தரைக்கும்
இழுத்து வரும் இயலாமை
சுட்டிக் காட்டும்,
நான்
இறக்கை இல்லாத
கிவி பறவையென்று.
உன் பாதைகள் நோக்கியே
என் பாதங்கள் செல்வதை
நிறுத்தமுடியாமல் திரும்புகிறேன்.
உன் பேச்சுக்களைக் கேட்கவே
என் காதுகள் கூர்மையாவதை
தவிர்க்கமுடியாமல் தோற்கிறேன்.
நம் முகம் இரண்டும்
நேரே பார்க்க மறுத்தாலும்
புன்னகைத்துக் கொள்வது உண்மை.
நீயும் நானும் மகிழ்ந்து குலாவியதை
நியாபக அடுக்குகளில் தேடி
அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் கூட்டை வந்தடையும்
மென்மையான பொழுதுக்காக
அடிவாரமிட்டிருக்கிறது நம் ஊடல்.
நிலாச்சாரலில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.nilacharal.com/ocms/log/11100806.asp