ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

சொச்ச தூரத்தில் ஒரு
சொர்க்கம்,
மொட்டை மாடி.


நாகரீகங்களும்,
வளர்ந்த கட்டிடங்களும்
அர்த்தமற்றுப் போகும் இடம்.


வான் கடல்
இறைத்து விட்டுப் போன
கிளிஞ்சல்களாய் மேகங்கள்,
அவற்றில் வண்ணம் தூவி
ஹோலி கொண்டாடும்
அந்தி நேரச் சூரியன்,
இந்தப் பரவசத்தில்
நாளும் புல்லரித்துப்போகும்
பூமியின் ரோமங்களாய்
மரங்கள்,
திசையெங்கும் அளந்து முடித்து
கூடு திரும்பும் பறவைகள்,
ஆடைக்குள் புகுந்து
அக்குளில் கூச்சம்
காட்டும் பிஞ்சு விரல்களாய்
அந்திநேரத் தென்றல்,
இத்தோடு சேர்ந்து கொண்டு
சத்தம் என்னும்
சட்டை கழற்றி எறிந்து
மௌனம் உடுத்தி
அம்மணமானது ஒலி.


அந்த நிசப்த
நேரத்தில் போதி மரங்களை
தேடியலையும் எண்ணங்கள்,
பாவ மன்னிப்புக்காக
பாதரியாரைத் தேடியலையும்
பாவ சிந்தனைகள்.


வண்ணம் தூவி
விளையாடி முடித்த
கதிரவன் வீடு திரும்ப,
இருட்டுக் கம்பளத்தைப்
போர்த்திக் கொள்ளும்
வானம்.


இருண்ட பிறகு
திண்ணைப் பேச்சுக்குக்
கூடும் கிராமத்துக்
கன்னிப் பெண்களாய்
விண்மீன்கள் கூட்டமிடும்.


இதில் லயித்துக் கொண்டே
எண்ணக் கால்கள்
தரையை விடுத்து
தாவியெழும் விண்ணுக்கு....


கானம் பாடத் தெரிந்து
கூடு கட்டத் தெரியாத
குயிலாய் மாறத் தூண்டும்
ஆசையைத் துறக்கச்
சொல்லும் ஓர்
அந்தரங்க நரம்பு,
அந்த எண்ணங்களின்
கால்களை தரைக்கும்
இழுத்து வரும் இயலாமை
சுட்டிக் காட்டும்,
நான்
இறக்கை இல்லாத
கிவி பறவையென்று.

2 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

oru azhakiya annal oru nijamana anupavam pola ;)

ஆமாம்! இது ஒரு உண்மையான அனுபவம்தான். எனக்கு மொட்டைமாடியில் அமர்ந்திருப்பது மிகவும் பிடித்தம். ஒரு முறை சென்னைக்கு சென்ற பொழுது அப்படியொறு வாய்ப்பு அமைந்தது. மூன்று மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தேன் அந்தியில் ஆரம்பித்து இரவு வரை. அது ஒரு சுகானுபவம்.